ஹாரி-மேகனின் இன பாகுபாடு குற்றச்சாட்டு: இங்கிலாந்து ராணி- குடும்பத்தினர் வருத்தம்
சில ஆண்டுகளாக ஹாரி மற்றும் மேகன் எவ்வளவு சவாலாக இருந்து வந்துள்ளனர் என்பதை முழு குடும்பமும் அறிந்து வருத்தப்படுவதாக ராணி எலிசபெத் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் 2-வது மகன் இளவரசர் ஹாரி. இவர் முன்னாள் அமெரிக்க நடிகையான மேகனை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இதற்கிடையே இங்கிலாந்து அரச குடும்பத்தினர் அதிகாரம் மீது பற்று இல்லாமல் ஹாரி-மேகன் இருந்தனர்.
இதனால் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். அவர்கள் 2 வயது மகன் ஆர்ச்சியுடன் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகிறார்கள். தற்போது மேகன் 2-வது முறையாக கர்ப்பமாக உள்ளார்.
இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சியில் புகழ்பெற்ற நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்பிரே நடத்திய நேர்காணலில் ஹாரி- மேகன் பங்கேற்று பேட்டி அளித்தனர்.

அப்போது பல்வேறு குற்றச்சாட்டுகளை மேகன் கூறினார். குறிப்பாக இங்கிலாந்து அரச குடும்பத்தினர் இன பாகுபாடுடன் நடந்து கொண்டனர் என்று கூறினார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘எங்கள் மகன் கருப்பாக பிறந்து விடுவானோ என்று இங்கிலாந்து அரச குடும்பத்தினர் கவலை அடைந்தனர். எனது பிள்ளைக்கு பாதுகாப்பு கிடைக்காது இளவரசர் பட்டம் கிடைக்காது என்ற பேச்சுக்கள் எழுந்தன.
கலப்பின பெண்ணான எனக்கு பிறந்ததால், மகன் ஆர்ச்சிக்கு இளவரசர் பட்டம் மறுக்கப்பட்டது’ என்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்து ராணி எலிசபெத் சார்பில் பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சில ஆண்டுகளாக ஹாரி மற்றும் மேகன் எவ்வளவு சவாலாக இருந்து வந்துள்ளனர் என்பதை முழு குடும்பமும் அறிந்து வருத்தப்படுகிறார்கள். எழுப்பப்பட்ட பிரச்சனைகள், குறிப்பாக இனம் தொடர்பானது போன்றவை மிகவும் தீவிரமாக எடுத்து கொள்ளப்படும். அவை அனைத்தும் குடும்பத்தினரால் தனிப்பட்ட முறையில் ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பகிரவும்...