ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து சிறிகாந்தாவிடம் யாழ். பொலிஸார் விசாரணை!
தியாகி திலீபனின் நினைவேந்தல் தொடர்பாக ஒன்றுகூடிய தேசிய தமிழ்க் கட்சிகளின் தீர்மானத்தையடுத்து, தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் N.சிறிகாந்தாவிடம் யாழ். பொலிஸார் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
தியாகி திலீபனின் நினைவுகூரலை தடைசெய்யக்கோரி பொலிஸார் தாக்கல்செய்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில், திலீபனின் நினைவுகூரல் நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீடித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவையடுத்து, தமிழ் தேசியம் சார்ந்த பத்து அரசியல் கட்சிகள் ஒன்றுகூடி ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்தன.
இதன்போது எதிர்வரும் 26ஆம் திகதி யாழ்ப்பாணம், செல்வச் சந்நிதி கோயில் வளாகத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டதாக தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் N.சிறிகாந்தா அறிவித்தார்.
இதன்போது வரும் 26ஆம் திகதி தியாகி திலீபனின் நினைவுகூரலை ஆலயங்களில் விசேட பூசைகள் மற்றும் வீடுகளில் இருந்தவாறும் மக்கள் நினைவுகூருமாறு அறிவித்தார்.
மேலும் எதிர்வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே ஊடக சந்திப்பைத் தொடர்ந்து, தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் N.சிறிகாந்தாவிடம் யாழ். பொலிஸார் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.