ஸ்மித், வோர்னர் மீதான தடைக்காலம் தொடர்ந்து நீடிக்க வேண்டும்: ஜோன்சன்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணியின் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோர்னர் மற்றும் பான்கிராப்ட் ஆகியோர் மீதான தடைக்காலம் தொடந்தும் நீடிக்கப்பட வேண்டுமென அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.

தொடர் தோல்விகளினால் ஆட்டம் கண்டு வரும் அவுஸ்ரேலியா அணி, இழந்த பலத்தை மீண்டும் பெற வேண்டுமாயின், தடை விதிக்கப்பட்டவர்கள் மீண்டும் அணிக்குள் உள்வாங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகின்ற நிலையில், மிட்செல் ஜோன்சன் இவ்வாறு கூறியுள்ளார்.

மிட்செல் ஜோன்சனின் டுவிட்டர் பக்கத்தில் கிரிக்கெட் நிருபர் ஒருவர், ‘கிரிக்கெட் சபை, மூவரின் தடைக்காலத்தை குறைப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. அவர்கள் உள்ளூர் தொடரின் கடைசி போட்டியில் விளையாட முடியும்’ என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதில் டுவீட் செய்திருந்த ஜோன்சன், ‘மூன்று வீரர்கள் தடை பெற்றிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் தண்டனை குறைக்கப்படும் என்ற செய்தி முன்னோக்கிச் சென்றால், பான்கிராப்ட் தண்டைனை குறைக்கப்படும் அளவிற்கு ஸ்மித் மற்றும் வோர்னரின் தண்டனை குறைக்கப்படலாம்.

மூன்று பேரும் அவர்களுடையை தண்டனையை ஏற்றுக் கொண்டார்கள். அதை எதிர்த்து முறையீடு செய்யவில்லை. ஆகவே, தடைக்காலம் தொடர்ந்து நீடிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோர்னர் ஆகியோருடன் விளையாடிய மிட்செல் ஜோன்சனே இவ்வாறு கூறியிருப்பது, பலரையும் அதிருப்தியடைய வைத்துள்ளதோடு, சிலர் இருந்த கருத்தினை வரவேற்றும் உள்ளனர்.

தென்னாபிரிக்கா அணிக்கெதிராக கேப் டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது, பந்தை சேதப்படுத்தியதற்கு மூளையாக செயல்பட்ட காரணத்தினால், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோர்னர் ஆகியோருக்கு போட்டிகளில் விளையாய ஒருவருட தண்டனையும், பந்தை சேதப்படுத்திய பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடையும் கிரிக்கெட் அவுஸ்ரேலியா விதித்தது.

இதன்பிறகு நிலைகுலைந்து போன அவுஸ்ரேலியா அணி, அடுத்து விளையாடிய அனைத்து போட்டிகளிலுமே படுதோல்வியடைந்தது. இதனால் இருவர் மீதான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.

இதற்கிடையில் குறித்த மூவர் மீதான தடைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என இன்று (செவ்வாய்க்கிழமை) கிரிக்கெட் அவுஸ்ரேலியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோர்னர் ஆகியோர் மீதான, கிரிக்கெட் அவுஸ்ரேலியாவின் தடை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி வரை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !