ஸ்டெர்லைட் ஆலையின் ஆய்வை தள்ளி வைக்க கோரிக்கை!

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதால் ஸ்டெர்லைட் ஆலையின் ஆய்வை தள்ளிவைக்குமாறு மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீரின் தன்மையை மத்திய நீர்வள ஆணையம் சமீபத்தில் ஆய்வு செய்தது. இதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில், மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் அமைத்த குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய உள்ளது குறித்த தகவல் தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற வழக்குகளை சுட்டிக்காட்டி, குழுவின் வருகையை தள்ளி வைக்குமாறு தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பெங்களூருவில் உள்ள மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய மண்டல இயக்குநருக்கு தமிழக மாசு கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

“மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் நியமித்த குழு, தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை மற்றும் சென்னையில் செப்டம்பர் 22 முதல் 24 ஆம் திகதி  வரை ஆய்வு செய்வது குறித்த தங்களது தகவல் செப்டம்பர் 17 ஆம் திகதி எங்களுக்கு கிடைத்தது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு விசாரணைக்கு உகந்ததுதானா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்திலும், தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.

அத்துடன், உச்ச நீதிமன்றத்தின் செப்டம்பர் 10 ஆம் திகதி உத்தரவு தொடர்பான சீராய்வு மனுவையும் தமிழக அரசு கடந்த 14 ஆம் திகதி தாக்கல் செய்துள்ளது.

இதுதவிர, தமிழக அரசாணையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் செய்துள்ள மேல் முறையீடும் விசாரணைக்கு உகந்தது அல்ல என்று தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், குழுவின் ஆய்வுப் பணியை தள்ளிவைக்க வேண்டும். எனவே, குழுவின் ஆய்வை ரத்து செய்யலாம். அது தொடர்பான தகவலை குழுவின் தலைவர், உறுப்பினர்களுக்கு தெரிவிக்கலாம்” எனக் கூறப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !