வேலையில்லா பட்டதாரிகளை அரசாங்கம் ஏமாற்றுகிறது- பட்டதாரிகள் சங்கம்
வேலையில்லா பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்பை வழங்குவதாக கூறி, அரசாங்கம் தொடர்ந்தும் ஏமாற்றி வருவதாக வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
எனவே அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டுக்கு, எதிர்வரும் 10 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அச்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஓருங்கிணைப்பாளர் தென்னே ஞானானந்த தேரர் தெரிவித்துள்ளதாவது, “வேலையில்லா பட்டதாரரிகளுடைய நியமன கடிதம் தொடர்பான பிரச்சினை பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
ஏனெனில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் காலப்பகுதியில் அரசாங்கம் வேலையில்லா பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்பை வழங்குவதாக கூறி நியமன கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.
ஆனால் தேர்தல் காலம் என்பதால் இதனை தேர்தல்கள் ஆணையாளர் தற்காலிகமாக இடை நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தற்போதைய அரசாங்கம், ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக தேர்தல் மேடைகளில் வேலையில்லா பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பை ஜனவரி மாதம் முதலாம் திகதியில் வழங்குவதாக அறிவித்திருந்தது.
அத்துடன் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வாக்குறுதியளித்ததை போன்று நியமனங்களை வழங்காமல் காலம் கடத்தும் நடவடிக்கைகளை புதிய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.