வேலூர் நீதிமன்றில் முருகன் ஆஜர்!

கைபேசி கைப்பற்றப்பட்ட வழக்கில் வேலூர் சிறையில் இருந்து முருகனை காவல்துறை பாதுகாப்புடன் நீதிமன்றில்   நேற்று(18)  முன்னிலைப்படுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான முருகன் வேலூர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் முருகன் மனைவி நளினியும் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நளினியும்-முருகனும் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து அரைமணி நேரம் பேச கோர்ட்டு அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி, பெண்கள் சிறையில் இருக்கும் நளினியை முருகன் காவல்துறை பாதுகாப்புடன் சந்தித்து பேசி வந்தார்.

இந்த நிலையில், முருகன் அறையில் இருந்து சமீபத்தில் கைபேசி கைப்பற்றப்பப்டது. இது தொடர்பாக முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றில் விசாரணை நடந்து வருகிறது.

செல்போன் கைப்பற்றப்பட்டதையடுத்து, மனைவி நளினியை மட்டுமின்றி பார்வையாளர்களை 3 மாதங்களுக்கு சந்திக்கவும் முருகனுக்கு சிறைத்துறை நிர்வாகம் தடை விதித்துள்ளது.

வழக்கு விசாரணைக்காக முருகனை, 2 முறை வேலூர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது, ஈழத்தில் இருந்து வந்த அவரது தாயார் சோமணி வெற்றிவேல் சந்தித்து பேச முற்பட்டார். ஆனால், தாயை சந்திக்க முருகனுக்கு அனுமதி கிடைக்கவில்லை.

இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் முருகன் மனு தாக்கல் செய்தார். அதில், மே 22 முதல் 27-ந் திகதிக்கு இடைப்பட்ட நாட்களில் அரை மணி நேரம் தாயை சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.இருத்தரப்பு வாதங்களுக்கு பிறகு, வழக்கு விசாரணை கோடை விடுமுறைக்கு பின் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், கைபேசி கைப்பற்றப்பட்ட வழக்கு விசாரணை வேலூர் ஜே.எம். எண்-1 கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வேலூர் ஜெயிலில் இருந்து டி.எஸ்.பி. ஆரோக்யம் தலைமையிலானகாவல் துறை பலத்த பாதுகாப்புடன் முருகனை அழைத்து வந்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

இருத்தரப்பு வாதங்களை கேட்டபின், மாஜிஸ்திரேட் அலிசியா வழக்கு விசாரணையை வரும் 22-ந் திகதிக்கு ஒத்தி வைத்தார். இதையடுத்து முருகன் மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !