வேறு ஒருவரிடம் இருந்து தானம் பெற்ற கருப்பை மூலம் குழந்தை பெற்ற பெண்

அமெரிக்காவில் டெக்சாஸ் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு பிறவியிலேயே கர்ப்பபை இல்லை. இதனால் அவரால் குழந்தை பெற இயலாத நிலை இருந்தது. எனவே வேறு ஒரு பெண்ணிடம் கர்ப்பபை தானம் பெற்று குழந்தை பெற முடிவு செய்தார்.

டெல்லாஸ் நகரில் உள்ள பேலார் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் டாக்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து அவருக்கு வேறு ஒரு பெண்ணிடம் இருந்து கர்ப்பபை தானம் பெற்று மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.

இதையடுத்து கர்ப்பம் அடைந்த அப்பெண் தற்போது அழகிய குழந்தையை பெற்றெடுத்தார். இதன் மூலம் கருப்பை தானம் பெற்று குழந்தை பெற்ற முதல் அமெரிக்க பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

இத்தகவலை பேலார் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் செய்தி தொடர்பாளர் கிரெய்க் சிவாலே உறுதி செய்தார். ஆனால் கருப்பை தானம் மூலம் குழந்தை பெற்ற பெண் குறித்த தகவலை வெளியிட மறுத்து விட்டார்.

இந்த ஆஸ்பத்திரியில் கருப்பை மாற்று ஆபரேசன் குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது. இங்கு 8 பெண்களுக்கு இதுபோன்று கருப்பை மாற்று ஆபரேசன் நடைபெற்றுள்ளது. அவர்களில் ஒரு பெண் குழந்தை பெற்றுள்ளார். மற்றொரு பெண் கர்ப்பிணி ஆக உள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு சுவீடனில் முதன் முறையாக கருப்பை தானம் மூலம் ஒரு பெண் குழந்தை பெற்றார். டாக்டர் மேட்ஸ் பிரான்ஸ்ட்ராம் முயற்சியில் வெற்றிகரமாக ஆபரேசன் நடைபெற்றது.

இறந்தவர்களிடமோ அல்லது உயிருடன் இருப்பவர்களிடமோ கர்ப்பபை தானம் பெற முடியும். தற்போது உலக அளவில் இதுபோன்று 16 கருப்பை மாற்று ஆபரேசன்கள் நடைபெற்று உள்ளது. அவர்களில் அமெரிக்காவின் கிளீவ் லேண்டை சேர்ந்த ஒரு பெண் இறந்தவரிடம் இருந்து கர்ப்பபை தானம் பெற்றார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !