வேட்பாளர்கள் குற்ற ஆவணங்களை ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும்: தேர்தல் ஆணையம்

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் குற்ற ஆவணங்களை ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அந்தவகையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் மீது பொலிஸ் வழக்கு நிலுவையில் இருந்தால் அது பற்றிய விபரங்கள், தண்டிக்கப்பட்டு இருந்தால் அது குறித்த தகவல்கள் அனைத்தையும் முன்னணி நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் குறைந்தபட்சம் 3 நாட்களுக்காவது விளம்பரம் செய்ய வேண்டும்.

மேலும், குற்ற நடவடிக்கைகள் அல்லது வழக்குகள் இல்லாத வேட்பாளர்கள் என்றால், அது குறித்த தகவல்களையும் அந்த வேட்பாளர் விளம்பரம் செய்திருக்க வேண்டும். இதைப்போன்று தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்ற ஆவணங்களை சம்பந்தப்பட்ட கட்சித்தலைமையும் விளம்பரப்படுத்த வேண்டும்.

அதேநேரம், அது குறித்த தகவல்களை தங்கள் இணையதளத்தில் வெளியிட்டு இருக்க வேண்டும். தவறும் கட்சிகள் மீது அங்கீகாரம் இரத்து, இடைநீக்கம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நடைமுறை எதிர்வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக அமுலுக்கு வருகின்றது.

இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதம் தேர்தல் ஆணையம், வேட்பாளர்கள் தங்கள் குற்ற ஆவணங்களை ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும் என அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !