வெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வரலாற்றில் முதன்முறையாக அந்நாட்டின் அதிபர் பராக் ஒபாமா தனது அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றி  தீபாவாளி கொண்டாடினார்.

அமெரிக்காவின் அதிபராக கடந்த 2008-ம் ஆண்டு பதவியேற்ற பராக் ஒபாமா, கடந்த 2009-ம் ஆண்டு வெள்ளை மாளிகையில் முதன்முதலாக தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

அதன்பின்னர், ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சேல் தலைமையில் அந்நாட்டின் எம்.பி.க்கள், ஒபாமாவின் நிர்வாகத்தின்கீழ் பணியாற்றும் அரசு உயரதிகாரிகள், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பிரமுகர்கள் ஆகியோர் பங்கேற்கும் தீபாவளி விழா அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வரலாற்றில் முதன்முறையாக அந்நாட்டின் அதிபர் பராக் ஒபாமா தனது அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றி இன்று தீபாவாளி கொண்டாடினார்.

இதுதொடர்பாக, வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ ‘பேஸ்புக்’ பக்கத்தில் ஒபாமா குத்துவிளக்கு ஏற்றும் புகைப்படத்துடன் அவரது தீபாவளி வாழ்த்து செய்தியும் வெளியாகியுள்ளது.

தனது வாழ்த்து செய்தியில் பராக் ஒபாமா கூறியுள்ளதாவது:-

வெள்ளை மாளிகையில் கடந்த 2009-ம் ஆண்டு தீபாவளியன்று முதன்முதலாக குத்துவிளக்கை ஏற்றிவைத்த முதல் அமெரிக்க ஜனாதிபதி என்பதை எண்ணி நான் பெருமிதம் கொள்கிறேன்.

நானும் எனது மனைவி மிச்சேலும் இந்தியா சென்றிருந்தபோது மும்பையில் குழந்தைகளுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடியதை நினைவுப்படுத்திப் பார்க்கிறேன்.

இருளை ஒளி எப்போதும் வெல்லும் என்பதை உணர்த்தும் குத்துவிளக்கை இந்த ஆண்டு எனது முட்டைவடிவ அலுவலகத்தில் முதன்முறையாக ஏற்றிவைக்கும் கவுரவம் எனக்கு கிடைத்துள்ளது. இந்த பாரம்பரியத்தை எதிர்கால அதிபர்களும் பின்பற்றுவார்கள் என கருதுகிறேன்.

தீபங்களின் திருநாளான தீபாவளியை அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் கொண்டாடும் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்! நீங்கள் அனவரும் உங்களது அன்புக்குரியவர்களுடன் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ எனது ஒட்டுமொத்த குடும்பத்தின் சார்பில் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !