வெள்ளத்தில் மூழ்கியது கேரளா: உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிப்பு!

கேரளாவின் பெரும் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்வடைந்துள்ளது.

கடந்த வாரம் முழுவதும் பெய்த பருவமழை, நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) முதல்  மேலும் அதிகரித்துள்ளதால் கேரளா எங்கும் வெள்ளக்காடாகியுள்ளது.

இதையடுத்து வெள்ளத்தில் சிக்குண்டு தவிப்பவர்களை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ள அதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.

குறித்த வெள்ளப்பெருக்கானது 50 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ளதாக, அம்மாநில மத்திய அமைச்சர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெள்ளம் காரணமாக 54 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தத்திளித்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு மாநிலத்தில் உள்ள 58 அணைகளில் 22 அணைகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாகவும், 40 ஆறுகள் கரைபுரண்டு ஓடுவதாகவும்,  சில அணைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த ஆறுகளின் நீர் வெளியெற்றம் மற்றும் மழை நீர் ஆகியன இணைந்து கேரளாவை வெள்ளக்காடாக்கியுள்ளது.

மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க பேரிடர் மீட்பு பணியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள அதேவேளை, மீட்கப்பட்டவர்களை தங்கவைக்க 439 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோழிக்கூடு மற்றும் வயநாடு போன்ற இடங்கள் தீவு போன்று மாறியுள்ள நிலையில், ராணுவத்தினர் தற்காலிக பாலங்கள் அமைத்து, வீடுகளுக்குள் இருப்பவர்களை மீட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !