வெளிநாடுகளில் தண்டனைக் காலம் முடிந்தும் 434 மீனவர்கள் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர் – வி.கே.சிங்

வெளிநாடுகளில் தண்டனைக்காலம் முடிந்தும் சுமார் 434 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்  என மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமர்வின் போது அவர் வெளியிட்டுள்ள எழுத்துமூல அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், வளைகுடா நாடுகளில் 4 ஆயிரத்து 705 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் தண்டனைக் காலம் நிறைவடைந்தும் 434 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 396 பேர் பாகிஸ்தான் சிறையில் உள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் நாட்டில் உள்ள சிறையில் 483 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் 503 மீனவர்கள் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 1,050 படகுகளையும் பாகிஸ்தான் பறிமுதல் செய்துள்ளது.

ஆனால் இதுகுறித்த தகவலை அந்த அறிக்கையில் தெரிவிக்கவில்லை. அவர்களை விடுவிக்கவும், படகுகளை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !