வெறுப்பு அரசியலால் தமிழக மக்களை வழிநடத்த இயலாது- கிருஷ்ணகிரியில் ராகுல்
கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமாரை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, வெறுப்பு அரசியலால் தமிழக மக்களை வழிநடத்த இயலாது என கூறினார்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, பாராளுமன்ற தேர்தலின் காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமாரை ஆதரித்து பேசியதாவது:
இங்கு வந்திருக்கக்கூடிய தொண்டர்கள், மக்களுக்கு மனமார வணக்கம் தெரிவிக்கிறேன். இந்தியா எனும் ஒரு நாட்டிற்கு பல்வேறு வித்தியாசங்கள் உள்ளன. அனைத்தும் தனித்தன்மை வாய்ந்தது. இந்த வித்தியாசங்கள், நாகரீகம் , பண்பாடு, வரலாறு, மொழி, ஆகியவற்றை நாம் அதிகம் மதிக்கின்றோம்.
நாட்டில் ஒவ்வொருவருக்கும் தனி அடையாளம் உண்டு. திமுக, காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சிகள் கூட்டணி, பாஜகவை எதிர்க்கின்றது. அவரது ஒரு சிந்தனை மக்களை வழிநடத்தும் என பிரதமர் மோடி நினைக்கிறார். இந்த நாட்டில் கோடிக்கணக்கான மக்களுக்கு தனிப்பட்ட சிந்தனை இருப்பதை மறந்துவிடுகிறார்.
தமிழக மக்கள் நினைத்தால் மத்தியிலும் ஆட்சியை மாற்ற இயலும். தமிழ் மக்களின் கலாச்சாரம், தமிழ் மீதான பற்று ஆகியவற்றை மற்றவர்களால் கட்டுப்படுத்த முடியாது. தமிழர்களால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். தமிழக மக்களை அவமதிப்பதால் பாஜக, அதிமுக ஆகியன எப்போதும் ஆட்சி நடத்த இயலாது. அன்பு செலுத்தினால் மட்டுமே ஆட்சி செய்ய இயலும். நான் அதை நன்கு புரிந்திருக்கிறேன். வெறுப்பு அரசியலால் தமிழக மக்களை வழிநடத்த இயலாது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு என தெரியும்.
மக்களுக்கு செல்ல வேண்டிய பணம் அனைத்தும் பாஜகவைச் சேர்ந்த 15 பேருக்கு மட்டுமே செல்கிறது. தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திய போது பிரதமர் மோடி பார்க்கக்கூட இல்லை. இளைஞர்களுக்கு எங்கும் வேலையும் கிடைக்கவில்லை. எனவே தான் நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும் நியாயம் கிடைக்கவே காங்கிரஸ் கட்சியினர் போராடி வருகிறோம்.
ஜிஎஸ்டி வரி வணிகத்தை அழித்திருக்கிறது. திருப்பூர் வேலைக்கொடுக்கக்கூடிய நகரம், அது இந்த ஆட்சியில் அழிக்கப்பட்டுள்ளது. இந்த கபர்சிங் வரியால் மக்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டனர். சரியான நேரத்தில் நியாய் திட்டத்தின் மூலம் ரூ.72 ஆயிரம் பணம் நாட்டில் வாழும் 20% ஏழை மக்களுக்கு அளிக்கப்படும்.
ஏழைகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்த பின்னர் தான் பணம் வங்கிக்கணக்கில் போடப்படும். ஏழைக் குடும்பங்கள் இதனால் பலன் பெறும். மேலும் தமிழகத்தில் தமிழனான ஸ்டாலின் முதல்வராக வேண்டும்.
வறுமைக்கு எதிராக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், உங்கள் குழந்தைகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். காஞ்சிபுரம், திருப்பூர் மீண்டும் புத்துயிர் பெறும். காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்படும். நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் விவசாயிகளுக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். அரசு எப்போதும் விவசாயிகளுடன் இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் ஆட்சி நடத்துவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.