Main Menu

வீழ்ச்சி அடைந்திருக்கும் பெருந் தோட்டத் தேயிலைத் துறை, மீளவும் கட்டியெழுப்பப் படல் வேண்டும்: கோத்தாபய

எமது நாட்டிற்கு பெரும் அன்னிய செலாவனியைப் பெற்றுக்கொடுத்து, உலக வர்த்தக சந்தையில் ஆரம்பத்தில் எமது தேயிலை முதலிடத்தை வகித்து வந்தபோதிலும், தற்போது தேயிலையின் தரம் வீழ்ச்சியடைந்து, உலக சந்தையில் நான்காவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

வீழ்ச்சியடைந்திருக்கும் பெருந்தோட்டத் தேயிலைத்துறை, மீளவும் கட்டியெழுப்பப்படல் வேண்டுமென்று, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச குறிப்பிட்டார்.

வெலிமடை மற்றும் கெப்பிட்டிப்பொல, தியத்தலாவை, ஹாலி-எல்லை ஆகிய இடங்களில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில், ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச கலந்துகொண்டு பேசும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “எமது நாட்டின் தரம் மிக்கதான தேயிலையை, தரமற்ற தேயிலையுடன் கலந்து மீள் சுழற்சியடிப்படையில் அக்கலப்படத் தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இதன் மூலம் உலகசந்தையில் எமது தேயிலையின் தரம் வீழ்ச்சியடைந்து, பெரும் பின்னடைவினை எதிர்நோக்கியுள்ளது. “சிலோன் டீ” என்ற நாமத்திற்கு கௌரவமோ, மதிப்போ இல்லாத நிலை, தற்போது காணப்படுகின்றது. இதனை இவ்வகையில் விட்டுவிட முடியாது. இப்பெருந்தோட்டத் தேயிலைத் துறையை நம்பி, பெருந்தோட்டத்துறை சமூகமே, இருந்து வருகின்றது.

நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் நான் ஜனாதிபதியாகும் பட்சத்தில், பெருந்தோட்டத்துறை சமூக மேம்பாட்டு விடயத்தில் அதிகூடிய அக்கறை செலுத்துவதோடு மட்டுமல்லாது, தேயிலையின் தரத்தையும் உயர்த்தும் வேலைத்திட்டத்தினை மேற்கொள்வேன். ஏற்கனவே இருந்து வந்தது போன்று, தேயிலை மூலம், பெருமளவிலான அன்னிய செலாவனியைப் பெற்றுக்கொள்ளவும், உலக சந்தையில் தேயிலையின் தரத்தை முதலிடத்தில் தக்கவைக்கவும், நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

எனது ஆட்சியில், வெளிநாட்டு விவசாயிகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. எமது நாட்டு விவசாயிகளை பாதுகாப்பதே, எனது முதற் பணியாகும். தேயிலை, இறப்பர், உருளைக்கிழங்கு, மிளகு, மரக்கறி, நெல், பால் உற்பத்தி போன்ற எமது நாட்டு விவசாயிகளை மேம்படுத்தி, அவர்கள் வாழ்க்கையில் சுபீட்சத்தை ஏற்படுத்த வேண்டும்.

இது போன்ற தேசிய விவசாயத்தை பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு என்னைச் சார்ந்ததாகும். இதற்கென்று, வெளிநாட்டிலிருந்து விவசாயப் பொருட்களை இறக்குமதி செய்வதை, தடுத்து நிறுத்தி, எமது நாட்டு விவசாயத்தை மேம்படுத்துவேன்.

விவசாயத்தின் மூலம், எமது நாட்டு விவசாயிகள் நல்லதொரு வருமானத்தைப் பெறக்கூடியதாக இருக்க வேண்டும். தொலைநோக்கு சிந்தனையுடன் இவ்வேலைத்திட்டத்தினை மேற்கொள்வேன். தற்போதைய அரசிடம், இத் தொலைநோக்கு வேலைத்திட்டம் எதுவுமே இல்லை. புதிய நவீன தொழில்நுட்பத்தை பூரணமாக அமுல்படுத்துவேன். விவசாயத்திற்கு தேவையான பசளை வகைகளை இலவசமாகவும், மானிய விலையிலும் விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடுகளை செய்வேன். எமது நாட்டிற்கு தேவையான உணவுத் தேவைகளை, நாமே பூர்த்தி செய்துகொள்ள வேண்டும்.

பயங்கரவாதங்கள் ஒழிக்கப்பட்டதும், காபட் பாதை சீரமைப்பு, அதிவேக பாதைகள், விமான நிலையங்கள் போன்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நாம் மேற்கொண்டிருந்தோம். அதன் பிறகான புதிய அரசு, அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அனைத்தையும் நிறுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவுகளை எதிர்கொண்டது. இளைஞர் சமூகத்தின் எதிர்பார்ப்புக்கள் கேள்விக்குறியாகியுள்ளன.

எமது ஆட்சியில் கல்வித்திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவேன். எமது ஆட்சியில் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த போதிலும், தற்போதைய அரசில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. கல்வியாளர்கள், புத்திஜீவிகள், சமூகநலன்விரும்பிகள், தொழில்நுட்பவியலாளர்கள் ஆகிய குழுவொன்றின் ஆலோசனைகளைப் பெற்று, இந்நாட்டிற்கேற்ப, எமது மக்களுக்கேற்ப நவீன வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி, மக்கள் வாழ்வில் ஒளிமயத்தை ஏற்படுத்துவேன்” என்றார்.

பகிரவும்...