Main Menu

வீடு திரும்பினார் விஜயகாந்த்

உடல் நலக்குறைவால் மருத்துவ சிகிச்சையில் இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வீடு திரும்பியதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 20 தினங்களுக்கும் மேலாக சிகிச்சையில் இருந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று வீடு திரும்பினார். இதனை அந்த தனியார் மருத்துவமனை அறிக்கை மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
விஜயகாந்த் கடந்த நவ. 18ஆம் தேதி சென்னையில் மியாட் மருத்துவமனையில் சளி, இருமல், தொண்டை வலி போன்ற உடல்நிலை பிரச்னைகள் காரணமாக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

அப்போது அவர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்தபோது நவ.29ஆம் தேதி மியாட் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில்,விஜயகாந்தின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது என்றும் எனினும் கடந்த 24 மணி நேரத்தில் (நவம்பர் 29) அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது எனவும் அறிவித்திருந்தது.
கிளம்பிய வதந்திகள்

இதற்கிடையில் பல்வேறு வதந்திகளும், ஊகங்களும் பரவிய நிலையில், தேமுதிக தரப்பிலும், குறிப்பாக தேமுதிகவின் பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா அத்தனை வதந்திகளுக்கும் பதிலடி கொடுத்து வந்தார். விஜயகாந்தின் மகன்கள் உள்பட அனைவரும் அவர் குணமடைந்து வருவதாக தெரிவித்தனர். மேலும், அவர் மருத்துவமனையில் இருப்பது போன்ற புகைப்படங்களை விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் வெளியிட்டிருந்தார்.

இதற்கிடையில், மருத்துவமனை 14 நாள்களுக்கு சிகிச்சை தேவை அறிவித்திருந்த நிலையில், விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குநரான மருத்துவர். பிரித்வி மோகன்தாஸ் வெளியிட்ட மருத்துவ நிலை அறிக்கையில்,”சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பினார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து தேமுதிக தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,”தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற்று மருத்துவமனையில் இருந்து இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இன்று வீடு திரும்பியுள்ளார் என்பதை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிரவும்...
0Shares