Main Menu

விஷம் அருந்திய ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல் தலைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி (Alexei Navalny) விஷம் அருந்தி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) காலை 44 வயதான அலெக்ஸி நவல்னி, சைபீரியாவில் உள்ள டாம்ஸ்க் நகரிலிருந்து தலைநகர் மாஸ்கோவுக்கு சென்ற விமானத்தில் பயணித்தார்.

இதன்போது, திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் விமானம் ஓம்ஸ்கில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து நவல்னியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘விஷம் அருந்தியதால் மயக்கமடைந்த நவல்னி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் சூடான திரவத்தில் விஷம் கலந்து குடித்ததாக கூறினார்கள். அவர் இன்று காலை தேநீர் மட்டுமே அருந்தியதால், அதில் கலந்து குடித்திருக்கலாம்’ என கூறினார்.

நவல்னி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனையின் தலைமை மருத்துவரின் அறிக்கையை இணைத்து ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மீதான வாக்கெடுப்பு ஒரு சதி என வாதாடிய நவல்னி, அரசையும், ஜனாதிபதி விளாடிமீர் புடினையும் தொடர்ந்து விமர்சித்து வந்ததால், பலமுறை கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர் ஆவார்.