விவசாயிகளுக்கு சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் அளித்துள்ள பெரும் உதவி

அண்மையில் ஏற்பட்ட கஜா புயலால் டெல்டா மாவட்ட விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நிவாரண உதவிகள் கிடைத்துவந்தாலும் தொலைந்து போன விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப பல வருடங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் மனமுடைந்துள்ள விவசாயிகளுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் பட்டுக்கோட்டையில் உள்ள திரையரங்கில் ‘கனா’ திரைப்படம் இலவசமாக திரையிடப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் செய்தனர்.

மேலும் படம் பார்க்க அனைத்து விவசாயிகளுக்கும் இடைவேளையின்போது சிற்றுண்டிகளும், படம் முடிந்தவுடன் மதிய உணவும் வழங்கப்பட்டதுடன் மரக்கன்றுகளும் இலவசமாக வழங்கப்பட்டன.

இத்திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த விவசாயிகள் சிலர் கருத்து கூறியபோது, ‘விவசாயம் என்றுமே தோற்றுவிடாது என்பதை இந்த திரைப்படம் எங்களுக்கு எடுத்துரைத்துள்ளது. நாங்கள் இனி புதுவாழ்வை தொடங்குவோம்’ என நெகிழ்ச்சியுடன் கூறினர்.

இதனால் சோர்ந்து போயிருந்த விவசாயிகளுக்கு ஒரு நம்பிக்கை பிறந்துள்ளதாக கூறப்படுகிறது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !