விவசாயிகளுக்கான உதவித் திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளார் மோடி

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டமைக்கு அமைய விவசாயிகளுக்கான 6,000 ரூபாய் நிதியுதவித் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

‘பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தை வரும் 24 ஆம் திகதி அவர் தொடங்கி வைக்கவுள்ளார்.

5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இந்தத் தொகை 3 தவணையாக ரூ.2,000 வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வைப்பிலிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

வரும் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாதத் தொடக்கத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதால் அதற்கு முன் இத்திட்டத்தை செயற்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதனால் அனைத்து மாநிலங்களிலும் இத்திட்டத்தில் பயனடையும் விவசாயிகளை கணக்கெடுக்கும் பணிகள் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன.

இத்திட்டத்தால் நாடு முழுவதும் 90 இலட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் 5 ஏக்கர் வரையுள்ள விவசாயிகள் நாடு முழுவதும் 50 இலட்சம் பேர் மாத்திரமே இருப்பது தற்போதைய கணக்கெடுப்பின் அடிப்படையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !