விவசாயிகளின் அழிவுக்கு தமிழக அரசே காரணம்: தினகரன்

தமிழக அரசு விவசாயிகளை அழித்து வருவதாகவும், தற்போதைய மத்திய அரசு தமிழக அரசை கோழிக்குஞ்சை காப்பாற்றுவது போன்று பாதுகாத்து வருவதாகவும், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போதே தினகரன் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,

“தமிழக அரசை யார் எதிர்த்தாலும், அவர்களை கைது செய்யும் நடவடிக்கையே தற்போதைய நிலைமைகவுள்ளது. பிரிட்டிஸ் அரசை போன்று அடக்கி ஒடுக்கி அடிமையாக நாட்டை வைத்திருக்கும் அரசாக தற்போதைய மத்திய, மாநில ஆட்சியுள்ளது.

விவசாயிகளின் அழிவுக்கு தற்போதைய தமிழக அரசே காரணம். காவிரி நீர் விவகாரம் உட்பட வங்கி கடன் என அனைத்து வகையிலும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இன்றைய அரசு எந்த விதத்திலும் தீர்வு பெற்றுக் கொடுப்பதாயில்லை.

தீவிரவாதிகள் இருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவது கேவலமானது. அவ்வாறு தீவிரவாதம் இருப்பதாக கருதினால், ஆதாரங்களை கொண்டு சட்டப்படி நாடுவதை விடுத்து, போன போக்கிற்கு கருத்துக் கூறி மக்களை பயமுறுத்திவிட்டு செல்வது ஒரு மத்திய அரசின் பொறுப்பல்ல.

அதே போன்று மக்கள் கேட்காத எட்டுவழிச்சாலை தேவையற்ற விடயம். மக்களின் நிலத்தை சுரண்டி அவர்களின் விருப்பத்தை மீறிய திட்டங்களை இந்த அரசு வலிந்து நடைமுறைப்படுத்துகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனையை ஏற்றுக் கொள்ளும் மக்கள், ஏன் எட்டு வழிச் சாலையை வெறுக்கிறார்கள் என்றால் அது அவர்களுக்கு தேவையற்றது.

அவ்வாறின்றி நீங்கள் கொண்டுவரும் திட்டம் நிஜாயமானது என்றால், அதை மக்களிடம் எடுத்துரைத்து விளக்கம் கொடுக்க வேண்டும். தங்களுக்கு தேவையா, இல்லையா என்பதை மக்கள் தான் முடிவுசெய்ய வேண்டும்.

இவற்றையெல்லாம் விடுத்து மக்கள் போராட்டம் நடத்தும் இடங்களுக்கு பொலிஸாரை அனுப்பி, அடித்து துன்புறுத்தி கைது செய்யமாறு உத்தரவிடுவது, மக்கள் மீது பொலிஸார் வன்முறையை பிரயோகிப்பதாகம்.

இவ்வாறான செயல்கள் சட்டவிரோதமானதென்பதோடு, மக்களுக்கு விரோதமாக செயற்படும் தற்போதை தமிழக ஆட்சி, விரைவில் முடிவுக்கு வருமென தினகரன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !