விரைவில் தேர்தல் பிரசாரம் செய்வேன் – விஜயகாந்த்
அதிமுக கூட்டணி தான் ஜெயிக்கும்; திமுக கூட்டணி தோற்கும் என்றும், விரைவில் தேர்தல் பிரசாரம் செய்வேன் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று விட்டு கடந்த பிப்ரவரி மாதம் சென்னை திரும்பினார்.
இதன் பின்னரே பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேர்ந்தது. நீண்ட பேச்சுவார்த்தை மற்றும் இழுபறிக்கு பிறகு அ.தி.மு.க-தே.மு.தி.க. இடையே கூட்டணி முடிவானது. 4 தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது.
கூட்டணி இறுதியானவுடன் பிரேமலதா அளித்த பேட்டியில், விஜயகாந்த் விரைவில் தேர்தல் பிரசாரம் செய்வார் என்று கூறி இருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னரும் அவர் இதே கருத்தை கூறி இருந்தார். இருப்பினும் விஜயகாந்த் பிரசாரத்துக்கு செல்வதற்கான எந்த அறிகுறிகளும் தேர்தல் களத்தில் காணப்படவில்லை.
இந்த நிலையில் விஜயகாந்த் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய பின்னர் விஜயகாந்த் அளித்துள்ள முதல் பேட்டி இதுவாகும்.
அ.தி.மு.க-தி.மு.க. கூட்டணி பற்றி கருத்து தெரிவித்துள்ள அவர் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடக்கும் போட்டி இதுவென்று கூறியுள்ளார். விஜயகாந்த் பேட்டி வருமாறு:-
கேள்வி:- வணக்கம் கேப்டன். எப்படி இருக்கிறீர்கள்.
பதில்:- நல்லா இருக்கேன் சார்.
ப:- உடல்நிலையெல்லாம் நன்றாக இருக்கிறது.
கே:- அமெரிக்கா சென்று வந்தபிறகு உடல்நிலையில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது?
கே:- தமிழக மக்கள் அனைவருமே நீங்கள் பிரசாரத்துக்கு எப்போது வருவீர்கள்? என்ன பேசப்போகிறீர்கள் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்?
ப:- கூடிய விரைவில் வருவேன். அங்க வந்து பேசுவேன்.
கே:- தொடர்ச்சியாக பிரசாரம் செய்வீர்களா?
ப:- டாக்டர் அட்வைஸ்படி தான் அதுபற்றி சொல்ல முடியும்.
கே:- அ.தி.மு.க-தே.மு.தி.க. கூட்டணி எப்படி இருக்கிறது? அதனை எப்படி பார்க்கிறீர்கள்?
ப:- அ.தி.மு.க. கூட்டணி தான் ஜெயிக்கும். தி.மு.க. கூட்டணி தோற்கும்.
கே:- தி.மு.க. கூட்டணி தோற்கும் என்று ஏன் சொல்கிறீர்கள்?
ப:- தி.மு.க. தில்லுமுல்லு கட்சி.
கே:- அ.தி.மு.க – தி.மு.க. கூட்டணிக்கு இடையேயான போட்டியை எப்படி பார்க்கிறீர்கள்?
ப:- தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடக்கிற போட்டி. தர்மம்தான் ஜெயிக்கும். தர்மம்தான் ஜெயிக்கும் (2 முறை சொல்கிறார்).
கே:- பிரதமர் மோடியை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ப:- நல்லவர். வல்லவர். அவர் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்.
கே:- தே.மு.தி.க. தொண்டர்களுக்கு இந்த தேர்தலில் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
ப:- நன்றாக உழைக்க வேண்டும். 40 தொகுதிகளிலும் கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.