விமானத்துடன் மாயமான கால்பந்து வீரர்- தேடும் பணி தீவிரம்

அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் எமிலியானோ சலா. பிரான்சின் நான்டஸ் அணிக்காக விளையாடி வந்த இவரை, வேல்ஸ் நாட்டின் கார்டிப் கிளப் அணி சமீபத்தில் வாங்கியது. கடந்த சனிக்கிழமை கார்டிப் நகரில் இதற்கான ஒப்பந்தத்தில் எமிலியானோ கையெழுத்திட்டார். பின்னர் பிரான்ஸ் திரும்பிய எமிலியானோ சலா, திங்களன்று மாலை ஒரு தனியார் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

சானல் தீவுகளுக்கு அருகே திடீரென அவரது விமானம் மாயமானது. விமானத்தில் பயணம் செய்த எமிலியானோ மற்றும் பைலட் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

சலா சென்ற விமானம் விபத்தில் சிக்கியதை பிரான்ஸ் விமான போக்குவரத்து ஆணையம் உறுதி செய்துள்ளது.  பைபர் மாலிபு என்ற சிறிய விமானம், திங்கட்கிழமை மாலை 7.15 மணிக்கு நான்டசிலிருந்து புறப்பட்டு ஒரு மணி நேரத்திற்குப் பிறகு காஸ்கட்ஸ் கலங்கரை விளக்கத்துக்கு அருகே மாயமானதாகவும், அதில் சலா பயணம் செய்ததாகவும் தெரிவித்துள்ளது. ஆனால், விமானம் ரேடாரில் இருந்து எப்படி மறைந்தது என்பது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இது குறித்து கார்டிப் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி கென் சூ கூறுகையில்,  ‘பிரீமியர் லீக் கிளப்பில் உள்ள அனைவரும் நிலைமையை உணர்ந்து மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். எனினும் விரைவில் நல்ல தகவல் கிடைக்கும் என நம்பிக்கையில் பிரார்த்தனை செய்கின்றனர்’ என்று கூறினார்.

இந்நிலையில் காணாமல் போன சலா மற்றும் பைலட்டை மீட்க தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும், இதுவரை எந்த ஒரு தடயமும் இல்லை எனவும் குயர்ன்சி போலீசார் தெரிவித்தனர். விமானம் தண்ணீரில் இறங்கியிருந்தால் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு எனவும் தெரிவித்துள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !