விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாரீஸ் விமான நிலையத்தில் பயணிகள் வெளியேற்றம்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் Charles de Gaulle விமான நிலையத்தில் இருந்து லண்டன் ஹீத்ரூவுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது.

அந்த விமானத்தில் 130 பயணிகள் இருந்தனர். புறப்பட தயாராக இருந்த நிலையில் திடீரென அந்த விமானத்துக்கு வெடி குண்டு மிரட்டல் வந்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். விமானத்தை சுற்றி அரண் போன்று அவர்கள் நிறுத்தப்பட்டனர். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் குழுவினர் விமானத்துக்குள் வந்து பயணிகளையும், உடமைகளையும் சோதனை செய்தனர்.

ஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லை. இருந்தாலும் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னரும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. எனவே, இது புரளி என தெரிய வந்தது. அதை தொடர்ந்து சிறிது நேர தாமதத்துக்கு பிறகு விமானம் புறப்பட்டு சென்றது.

இதற்கிடையே விமானத்தில் பயணம் செய்ய இருந்த 50 வயது பெண் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !