விமானக் கட்டணங்கள் அதிகரிக்கலாம் – அனைத்துலக விமானப் போக்குவரத்து அமைப்பு
அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தகப் போர், அதிகரித்துவரும் எண்ணெய் விலை ஆகியவற்றால் விமான நிறுவனங்களின் லாபம் இந்த ஆண்டு தொடர்ந்து குறையக்கூடும் என்று அனைத்துலக விமானப் போக்குவரத்து அமைப்பு கூறியிருக்கிறது.
2019-ஆம் ஆண்டு விமான நிறுவனங்களில் ஒட்டுமொத்த நிகர லாபம் 35.5 பில்லியன் டாலராக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அது 28 பில்லியன் டாலருக்குக் குறைக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கான செலவு, எண்ணெய் விலை, கட்டமைப்புச் செலவு ஆகியவை அதிகரித்திருப்பது அதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது.
அமெரிக்க-சீன வர்த்தகப் போரால் விமானச் சரக்குப் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்படும்; அதே சமயம் பயணிகள் போக்குவரத்திலும் அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அனைத்துலக விமானப் போக்குவரத்து அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.
அதனால் விமானக் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
தென் கொரியத் தலைநகர் சோலில் அனைத்துலக விமான நிறுவனங்களுக்கான சந்திப்பு நடைபெறுகிறது.