விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களின் சிவப்பு எச்சரிக்கை இரத்து?

கடந்த காலத்தில் பயங்கர குற்றங்களுடன் தொடர்புபட்ட விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் உட்பட 150 பேருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த சர்வதேச காவல் துறையின் (இன்டர்போல்) சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே குறித்த விடயத்தினை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் உட்பட பயங்கரத் குற்றங்களுடன் தொடர்புடைய 150 பேரைக் கைது செய்ய கடந்த காலங்களில் இலங்கை பொலிசார் இன்டர்போலின் ஊடாக சிவப்பு எச்சரிக்கையினை பிறப்பித்திருந்தனர்.

எனினும் குறித்த சிவப்பு எச்சரிக்கைகளை தற்போது நல்லாட்சி அரசாங்கம் நீக்கிக் கொண்டுள்ளது. தற்போதைய நிலையில் மூன்று இலங்கையர்களுக்கு மாத்திரமே சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல்வாதிகள் சிலர் மூலம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாகவே தற்போதைய அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது எனவும் உதயங்க விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !