Main Menu

விடுதலைக்காக உயிரை அர்ப்பணித்த தியாகிகளை நினைவு கூருவது தமிழரின் அடிப்படை உரிமை -சுரேஸ்

விடுதலைக்காக உயிரை அர்ப்பணித்த தியாகிகளை நினைவுகூருவது தமிழரின் அடிப்படை உரிமை என மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தமிழ் மக்களின் விடுதலைக்காக மரணித்துப் போனவர்களை அஞ்சலிக்கும் நிகழ்வுகளை அரசாங்கம் தடை செய்வதைக் கண்டித்தும் அஞ்சலிப்பது தமிழ் மக்களின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தியும் நாளை நடைபெறவிருக்கும் ஹர்த்தாலில் அனைத்து தமிழ், முஸ்லிம் மக்களையும் கலந்துகொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், “தமிழ் மக்களின் விடுதலைக்காக இலட்சக்கணக்கான பொதுமக்களும் பல்லாயிரக்கணக்கான போராளிகளும் தமது இன்னுயிரை தியாகம் செய்துள்ளார்கள்.

அவர்களுக்காக அஞ்சலி செலுத்துவதும் அவர்களை கௌரவபடுத்துவதும் அவர்களை நினைவு கூருவதும் ஒவ்வொரு தமிழனதும் கடமையாகும். இந்த அஞ்சலி என்பது ஐ.நா. சாசனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு செயற்பாடுமாகும்.

இலங்கையைப் பொறுத்தவரையில் இந்த அஞ்சலி நிகழ்வுகளைக் கடைப்பிடிப்பது என்பது ஒரு போராட்டமாகவே மாறிவருகின்றது.

எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் அந்த அரசாங்கங்கள் அதனை தடை செய்வதும் நீதிமன்றங்களின் ஊடாக தடைகளைப் பெற்றுக்கொள்வதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

இந்த வருடமும் உரிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த அஞ்சலி நிகழ்வுகளுக்கு எதிராக தடைகளைப் பெற்று வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் அஞ்சலி நிகழ்வுகளில் பங்குக் கொள்ளக்கூடாது என்ற ஒரு நிலையை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்த அஞ்சலி நிகழ்வுகளை நடாத்த முற்பட்டபொழுது ஒவ்வொரு இடத்திலும் அதற்கு எதிரான தடைகளை பொலிஸார் நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக்கொண்டனர்.

ஆனால், அரசாங்கத்தினுடைய இந்த அடக்கு முறைகளைக் கண்டித்தும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் நோக்கத்துடனும் நேற்றைய தினம் சாவகச்சேரியில் ஓர் உண்ணாநோன்பை வெற்றிகரமாக நடாத்தி முடித்தோம். இராணுவ, பொலிஸ் சுற்றிவளைப்புக்குள் இந்த உண்ணாநோன்பு நடைபெற்றது.

இதன் அடுத்த கட்டமாக தமிழ் மக்களினுடைய விடியலுக்காக போராடி மரணித்துப் போன அனைத்து பொதுமக்கள் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் எமது உரிமையை நிலைநாட்ட வேண்டியுள்ளது.

அதற்கமைய வடக்கு – கிழக்கு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு ஹர்த்தாலினூடாக எமது கோரிக்கையை வலியுறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது.

நாம் அனைவரும் இணைந்து இதனை வலியுறுத்தாவிட்டால் இலங்கை அரசாங்கம் வட – கிழக்கை தனது சிங்கள – பௌத்த மேலாதிக்கத்துக்குள் கொண்டுவரும். அதற்கான பல்வேறுப்பட்ட நடவடிக்கைகளை ஏற்கனவே இந்த அரசாங்கம் எடுத்து வருகின்றது.

இந்த சூழலில்தான் இந்த உண்ணாநோன்பைத் தொடர்ந்து வடக்கு, கிழக்கில் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முழுக்கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தத்தைச் செய்து ஒரு முழுமையான ஹர்த்தாலை அனுஸ்டிக்கும்படி வேண்டுகின்றோம்” என தெரிவித்துள்ளார்.

பகிரவும்...
0Shares