விஜயகலா விவகாரம்: விசாரணைகள் நிறைவு- அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிப்பு

விடுதலைப் புலிகளின் மீள்வருகையை வலியுறுத்தும் வகையிலான நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பான அனைத்து விசாரணைகளையும் நிறைவுசெய்து அது தொடர்பான அறிக்கை சட்டமா அதிபருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

விஜயகலா விவகாரம் தொடர்பாக சட்டமா அதிபரின் அறிவுறுத்தலை கேட்டறியும் வகையில் குறித்த அறிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளதாக குற்ற விசாரணை பிரிவு அறிவித்துள்ளது.

விஜயகலாவின் சர்ச்சை கருத்து தொடர்பான வழக்கு கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்போதே பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், விஜயகலா விவகாரம் தொடர்பாக இதுவரை 59 வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஆறு அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், 14 அரச அதிகாரிகளும், 30 ஊடகவியலாளர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் வெளிப்படுத்தப்படும் வரை வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறும் பொலிஸார் நீதிமன்றை கோரியிருந்தனர்.

அதற்கமைய, வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !