விக்கி – சுரேஸ் கூட்டு பொருத்தமானதா?
எதிர்வரும் 23ம் திகதியுடன் வடமாகாண சபையின் ஆட்சிக்காலம் முடிவடைகிறது. இந்நிலையில் தனது அடுத்த கட்ட அரசியல் தொடர்பில் 24ம் திகதி முதலமைச்சர் விக்னேஸ்வரன் பொதுக்கூட்டம் ஒன்றை நடாத்த இருக்கிறார்.அதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று அடுத்த கட்ட அரசியல் நகர்வை அறிவிப்பார் என்று தெரியவருகிறது.
விக்னேஸ்வரனால் உருவாக்கப்படவிருக்கும் இப்புதிய கூட்டில் அனந்தி, சுரேஸ், அருந்தவபாலன் மற்றும் ஐங்கரநேசன் இருக்கிறார்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறிய முடிகிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு தொடர்பில் விக்கி தரப்பு மௌனமாக இருப்பதாகவே தோன்றுகிறது.
இந்நிலையில் இக்கூட்டடைப் பற்றி ஆராய்ந்தால் இதில் இருப்பவர்களின் சுரேஸ் கொள்கையற்றவர் என்பதுடன் மகிந்த, றணிலுக்கும் தனது ஆதரவை வழங்கியிருந்த ஒருவர்.
இவர் இந்திய அமைதிப்படையின் காலகட்டத்தில் இந்தியப்படைகளுடன் சேர்ந்தும் பின்னர் இந்தியப்படைகள் இலங்கையில் இருந்து வெளியேறியவுடன் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்தியங்கினார். அதன் பின்னர் புலிகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தின் போது பொது மன்னிப்பளித்து புலிகளால் கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டிருந்தார். 2009 புலிகள் இயக்கம் ஈழத்தில் அழிக்கப்பட்ட பின்பும் 2015 வரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்தார். 2015இல் சுரேஸ் திட்டமிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஓரங்கப்பட்டு தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். அத்துடன் இனி கூட்டமைப்பை நம்பி பலன் இல்லை என்பதை உணர்ந்த சுரேஸ் அதன் பின்னர் 2017 ஒக்டோபர் மாதம் வரையிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் நெருங்கிப்பழகினார். இந் நெருக்கமும் நீண்ட காலம் நிலைக்கவில்லை. உள்ளுராட்சித் தேர்தலுடன் இவ் உறவும் முறிந்தது.
புலிகளால் முற்றாக ஒதுக்கப்பட்ட, தமிழ்த் தேசிய விரோத கொள்கைகளை கொண்ட ஆனந்த சங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேர்ந்தார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் அங்கு வருமாறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. கொள்கைக்கு தான் கூட்டே என்று உறுதியாக நின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தோற்றாலும் பரவாயில்லை தனியே நின்று தோற்பதென்று தேர்தல் களத்தை தனித்து நின்று எதிர்கொண்டதுடன் மக்கள் ஆதரவையும் பெருமளவில் பெற்றுக்கொண்டு பெரும் எழுச்சியை பெற்றுக்கொண்டது. வடகிழக்கில் தமிழ்த் தேசிய கொள்கைகளை முன்வைத்து குறுகிய காலத்தில் பெரும் எழுச்சிகண்ட ஒரு தரப்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தன்னை நிலைநிறுத்திக்கொண்டது.
ஆனந்தசங்கரி மற்றும் சிலருடன் சேர்ந்தால் பெரு வெற்றி பெறலாம் என்ற கனவில் மிதந்த சுரேஸ் தரப்பு மண் கவ்விக்கொண்டது. வடக்கில் வவுனியாவில் மட்டுமே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை விட அதிக வாக்குகளை பெற்றுக்கொண்டது. அதுவும் சுரேஸ் தரப்புக்கு 11 ஆசனம் முன்னணிக்கு 6 ஆசனம். இதை சுரேஸ் தரப்பிற்கான வெற்றி என்று கூறமுடியாது ஏனென்றால் சுரேஸ் தரப்பின் சிவசக்தி ஆனந்தன் வவுனியா பாராளுமன்ற உறுப்பினராவார். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கொண்ட சுரேஸ் தரப்பு, அவ்வாறான பின்னணி ஒன்றும் இல்லாமல் அதற்கு முன் நடந்த அத்தனை தேர்தல்களிலும் கட்டுக்காசிழந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை விட சொற்ப வாக்குகளையே அதிகமாக பெற்றிருந்தது.
இந்நிலையில் சுரேஸ் தரப்பு வவுனியாவில் பிரதேசசபை ஒன்றை கைப்பற்றுவதற்காக இனப்படுகொலையாளி மகிந்தவின் கட்சியுடன் டீல் போட்டதுடன் அந்த சபையை கைப்பற்றியும் இருந்தது. அது போக சில மாதங்களுக்கு முன்னர் றணிலை தோற்கடிக்க பொது எதிரணியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நிபந்தனையில்லாமல் ரணிலுக்கு தனது ஆதரவை சுரேசின் தலைமை வழங்கியிருந்தது. ஆனால் யாழ்ப்பாணத்தில் இரு சபைகளில் முன்னணியில் இருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நினைத்திருந்தால் யாருடனும் டீல் போட்டுக்கொண்டு அந்த சபைகளை கைப்பற்றிக்கொண்டிருக்கலாம். ஆனால் கொள்கையற்ற யாருடனும் அற்ப பதவிக்காக சேர்ந்து ஆட்சியைப் பிடிப்பதை விட எதிர்க்கட்சியாக இருப்பதே மேல் என்று சொல்லிக்கொண்டு எதிர்க்கட்சியாக அமர்ந்து கொண்டது. கூட்டமைப்பும் பல இடங்களில் பதவிக்காக மகிந்த, றணில், ஈபிடிபி, மற்றும் அனைத்து சகல கட்சிகளுடனும் சேர்ந்து கொண்டது.
அதுமட்டுமல்லாமல் ஈழத்திற்கு சம்பந்தமேயில்லாத காந்தி ஜெயந்திக்கு வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் காலைப்பிரார்த்தனையின் போது காந்தி பற்றிய நினைவுரை நடாத்தப்படவேண்டும் என்று சுரேசின் தலைமையின் கீழ் இயங்கும் கல்வியமைச்சர் சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார். காந்தி ஜெயந்தி நடந்த காலகட்டம் தியாகதீபம் திலீபன் அண்ணாவின் நினைவேந்தல் நடந்த காலகட்டம். அதில் சுரேஸ் தரப்பு பங்கெடுக்கவும் இல்லை. அதுபோக சில நாட்களுக்கு முன்னர் அரசியல்கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நடைபயணம் ஒன்றை அனுராதபுரம் வரை செய்திருந்தனர். இது ஏ-09 வீதி வழியாக அனுராதபுரத்தை அடைந்தது. இந்த நடைபயணம் செல்லும் வழிகளில் உள்ள பாடசாலை மாணவர்களை அப்பேரணிக்கு ஆதரவளிக்குமாறு ஒரு சுற்றறிக்கை கூட அனுப்பியிருக்கவில்லை இந்த சுரேசை தலைமையாக கொண்ட கல்வியமைச்சர். இந்நிலையில் அந்த நடைபயணத்திற்கான பாடசாலை மாணவர்களின் ஆதரவு தன்னெழுச்சியாக வழங்கப்பட்டிருந்தது. கல்வியமைச்சர் என்ற வகையில் சுரேஸ் தரப்பு ஏதும் செய்திருக்க வேண்டும் ஏனென்றால் இது ஒரு முக்கியமான போராட்டம்.
இவ்வாறு தங்கள் மீது நிறைய விமர்சனங்கள் வருவதால் தனது அரசியல் எதிர்காலம் அழியப்போகிறது என்பதை உணர்ந்துகொண்ட சுரேஸ் ஆனந்தசங்கரியுடனான கூட்டை முறித்துக்கொண்டு மறுபடியும் பலமான வேறு ஒருவருடன் ஒட்டுவதற்கு சமயம் பார்த்துக்கொண்டிருந்தார். அந்நிலையில் தான் விக்கியின் புது அரசியல் பிரவேசம் அறிவிப்பு வந்தது. சுரேஸை தமிழ்த் தலைமையாக்க இந்தியா பெரிதும் விரும்பியது அதனால் சுரேஸை ஆனந்தசங்கரியின் தோள்களில் ஏற்றி அனுப்பிபார்த்தது. அது தோல்வியடைந்ததுடன் இப்போது சுரேஸை விக்கியின் முதுகில் ஏற்றி தமிழ்த் தலைமையாக்கலாம் எண்டு இந்தியா நினைத்திருக்ககூடும் என்கிறார்கள் அரசியல்ஆய்வாளர்கள். அதன்படியே விக்கியுடன் சுரேஸ் கூட்டு சேர்ந்திருக்ககூடும்.
அண்மையில் கூட இந்தியா அனைத்து தமிழ்த் தலைமைகளையும் அழைத்து கூட்டம் ஒன்றை நடாத்தியிருந்தது. இதில் கஜேந்திரகுமார் தரப்பு அழைக்கப்படவில்லை. இந்த இந்திய கூட்டம் முடிந்த பின்னரே கிழக்கில் ஈபிடிபி, கருணா, பிள்ளையான, ஆனந்தசங்கரி இணைந்து கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்ற புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளனர். அதேபோலே வடக்கில் உருவாகும் புதிய கூட்டின் பின்னணியும் சந்தேகங்களை கிளப்புகிறது.
சுரேஸ் தரப்பிற்கு தனித்து நின்று தேர்தலை எதிர்கொள்ளும் துணிவு இல்லை என்பதுடன் தனித்து நின்றால் தேர்தலுடன் அவரின் கட்சி காணாமலாக்கப்பட்டுவிடும் என்பது சுரேசுக்கும் தெரியும். இதனால் தான் பலமான மரத்தில் கொழுகொம்பை பிடித்து வளரும் பலமில்லாத கொடி போல இதுவரையும் யாருடனும் ஒட்டிக்கொண்டு அரசியலை செய்கிறார்.
ஆனால் கஜேந்திரகுமாரை தலைமையாக கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அவசரப்பட்டு வளர்ந்து உடனேயே அழிந்து போகும் கொடி போல இல்லாமல் மெல்ல உறுதியாக வளரும் மரம் போல வளர்ந்து தனக்கான ஒரு நிலையை தமிழ்த் தேசிய அரசியலில் எடுத்துக்கொண்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையை இனவயதினராகும். அதைவிட இரண்டாம் கட்ட தலைவர்கள், செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் இளைஞர்கள் தான். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கோ, விக்கி தரப்பிற்கோ, வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் வேறு தரப்புகளிற்கோ இல்லாத ஒரு விடயமாகும் அந்த தரப்புகளில் இருப்பவர்கள் பெரும்பாலும் வயதானவர்கள் என்பதுடன் அத்தலைமைகளும் வயதான தலைமைகளே.
அத் தலைமைகளின் மீதும் மக்கள் அதிருப்தி அடைந்து வெறுக்க தொடங்க இதுவரை இந்தியாவின் பிடியில் இருந்து தமிழ்த் தேசிய அரசியல் கைநழுவிப் போகப்போகிறது என்பதை உணர்ந்த இந்தியா 2018 உள்ளுராட்சி தேர்தலில் ஆனந்தசங்கரியை ஒரு மாற்று அணி என்ற போர்வையில் இறக்கி முயற்சிசெய்து பார்த்து தோல்வியடைந்து கொண்டது. இப்போது சுரேஸை விக்கியின் முதுகில் ஏற்றி கூட்டமைப்புக்கு மாற்று அணியை மீண்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே இந்தியா விரும்புகிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது நலனுக்காக மக்களின் நலனை விட்டுக்கொடுக்காது என்பது இந்தியாவிற்கு தெரிந்திருந்ததால் தான் அவர்கள் இந்தியாவில் அண்மையில் நடந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருக்கவில்லை.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமை, விக்கி, டக்ளஸ், ஆனந்தசங்கரி போன்றவர்கள் வயதான தலைமை என்பதால் இன்னும் 5 10 வருடங்களில் அது இல்லாமல் போய்விடும் என்பது இந்தியாவிற்கு நன்கு தெரியும். இப்போது இளம் தலைமையான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்தியாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு மக்களின் நலன்களை விட்டுக்கொடாது. தனது சொல்லுக்கு கட்டுப்படும் தலைமைகளில் இப்போதைக்கு சுரேசே ஓரளவே இளம் தலைமை. அதனால் சுரேசை தமிழ்த் தலைமையாக்கினால் இன்னும் 20 வருடங்களுக்கு தமிழ்த் தேசிய அரசியலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்பது இந்தியாவின் கணிப்பாக இருக்ககூடும்.
இந்நிலையில் கொள்கைப்பிடிப்பாளராக தன்னைக் காட்டிக்கொள்ளும் விக்கி சுரேசை தனது கூட்டில் இணைத்தால் அது விக்கி தனது தலையின் மீது தானே மண் அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயற்பாடாகும். ஏனென்றால் சுரேஸ் கேவலம் அற்ப சபை பதவிக்காக இனப்படுகொலையாளி மகிந்தவுடன் டீல் போட்டதுடன், நிபந்தனையில்லாது ரணிலுக்கு ஆதரவு அளித்தவர். இவை அனைத்தையும் கூட்டமைப்பு செய்ததாலேயே கூட்டமைப்பு இன்று துரோகியாக பார்க்கப்படுகிறது. இப்பிடியிருக்க சுரேசுக்கும் கூட்டமைப்புக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? பிறகேன் சுரேஸ் கூட்டமைப்பை விமர்சிக்கிறார்? கூட்டமைப்பை விமர்சிக்கும் தகுதி சுரேசிற்கு இல்லை ஏனென்றால் கூட்டமைப்பு செய்த அத்தனை கேவலம் கெட்ட செயல்களையும் சுரேசும் செய்துள்ளார்.
தனது புதிய கூட்டணியில் விக்கி சுரேசை முக்கிய பங்காளியாக சேர்க்கக்கூடாது. சுரேஸ் கட்டாயம் வருவேன் என்று அடம்பிடித்தால் அவரை தனது பஸ்சில் ஏற்றிக்கொள்ளலாம். ஒரு பயணியாகவே அவருக்கான சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டுமே தவிர சுரேஸ் சாரதியாக இருக்கக்கூடாது. அதாவது கொள்கைகளை முடிவெடுக்கும் அதிகாரம் கொள்கையற்ற சுரேஸ் தரப்புக்கு கொடுக்கப்படக்கூடாது. இரண்டு மூன்று ஆசனங்களை மட்டும் விக்கி தரப்பு சுரேசிற்கு கொடுக்கலாம். சுரேஸை விக்கி கழட்டிவிட்டாலும் விக்கிக்கு அதனால் பிரச்சனையில்லை ஏனென்றால் சுரேசின் வாக்கு வங்கி 3000 4000 வரையில் தான் இருக்கிறது.
இதனால் விக்கி – சுரேஸ் கூட்டு பொருத்தமற்றது. தமிழ்த் தேசிய அரசியலில் உறுதியாக நிற்கும் கட்சிகளையும், அமைப்புகளையும் மாத்திரமே விக்கி தன்னுடன் சேர்த்து பயணிக்க வேண்டும். இல்லையேல் இப்போது சம்பந்தன் பழி சுமப்பது போல விக்கியும் பழி சுமக்கும் நிலைமை வெகுவிரைவில் வரும்.