விஐபி ஹெலிகொப்டர் கொள்முதல் ஊழல் – முக்கிய ஆவணங்கள் சிபிஐ வசம்…

ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழலில், இடைத்தரகர்களுக்கு 431 கோடி ரூபாய் பணம் கைமாறியது தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிபிஐ வசம் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய வி.ஐ.பி.க்கள் பயணிப்பதற்காக, இந்திய விமானப் படைக்கு 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பில் 12 ஹெலிகாப்டர்கள் வாங்க, அகஸ்டாவெஸ்ட்லேண்ட் என்ற இத்தாலி நிறுவனத்துடன் முந்தைய காங்கிரஸ் அரசு ஒப்பந்தம் செய்தது.

இதில், பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றதாகவும், இடைத்தரகர்கள் மூலமாக லஞ்சம் பணம் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இந்த ஊழல் வழக்கில் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இடைத்தரகராக செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்படும் கிறிஸ்டியன் மைக்கேலிடம், அமலாக்கத்துறை தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே, ஹெலிகாப்டர் ஒப்பந்த பேரம் தொடர்பாக இந்தியாவில் கையூட்டு அளிப்பதற்காக, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து கிறிஸ்டியன் மைக்கேல் உள்ளிட்ட 2 இடைத் தரகர்களுக்கு 431 கோடி ரூபாய் கைமாறியது தொடர்பான ஆவணங்கள் சிபிஐ வசம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிறிஸ்டியன் மைக்கேல், கைடோ ஹஸ்சக் (Guido Haschke) ஆகிய இருவரும் இடைத்தரகர்களாக செயல்பட்ட நிலையில், அதற்கான தொகையைப் பெறுவதில் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டதாகவும், துபாயில் இதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆவணங்களையும் இரு தரப்புக்கும் 54 மில்லியன்கள் யூரோ அளவுக்கு பணம் வழங்கப்பட்டது தொடர்பான ஆவணங்களும் சிக்கியிருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த சஞ்சீவ், சந்தீப், ராஜீவ் ஆகியோருக்கு 10.5 மில்லியன் யூரோக்கள் கொடுக்கப்பட இருந்ததாகவும், அதில் 3 மில்லியன் யூரோக்கள் கொடுக்கப்பட்டு விட்டதாகவும் சிபிஐ ஏற்கெனவே குற்றம்சாட்டியுள்ளது.

இதேபோல, துபாய் Global Services FZE, லண்டன் Global Trade & Commerce Services ஆகிய 2 நிறுவனங்கள் மூலம் லஞ்சப் பணத்தை பிற கம்பெனிகளுக்கு மைக்கேல் மாற்றிவிட்டதாகவும் சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !