வாரணாசியில் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டி இல்லை- அஜய் ராய் போட்டியிடுகிறார்
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை. காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் நிறுத்தப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி பாராளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். அவர் நாளை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.
வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது. உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான பிரியங்கா காந்தியை வேட்பாளராக நிறுத்தலாம் என கடந்த சில தினங்களாக பேசப்பட்டது. அவர் வரும் 29-ம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்ய வாய்ப்புஉள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், வாரணாசி தொகுதிக்கான வேட்பாளரை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது. வாரணாசி தொகுதியில் அஜய் ராய் போட்டியிடுவார் எனவும், கோரக்பூர் தொகுதியில் மதுசூதன் திவாரி போட்டியிடுவார் எனவும், கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி அறிவித்துள்ளது.