வாக்கு வங்கியில் ஏன் சரிவு ஏற்பட்டது? – சுமந்திரன் விளக்கம்

மக்களிடம் எமது செயற்பாடுகள் தொடர்பில் சரியான தகவல் சென்றடையாத காரணத்தினாலே கடந்த தேர்தலில் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றைய தேர்தலை விடவும் வித்தியாசமானது. அதில் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் அதிகமான கட்சிகள் போட்டியிட்ட தேர்தல். அதை மற்றைய தேர்தல்களோடு ஒப்பிட முடியாது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கக் கூடிய சாத்தியக்கூறு இருக்கின்ற வரையில் நாம் பலருடன் சேர்ந்து இயங்க வேண்டிய நிலையுள்ளது.

அதேவேளை பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காமல் இருக்கின்ற சூழலில் எதிர்ப்புக் காட்டவேண்டிய வேண்டிய தேவையும் இருக்கின்றது.

எனவே எமது செயற்பாடுகள் தொடர்பில் மக்களிடம் சரியான தகவல் சென்றடையாததாலே இந்த சரிவு ஏற்பட்டது.

அத்துடன் அபிவிருத்திக்கென மாவட்ட செயலகங்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கையூட்டாக கொடுக்கப்பட்டதாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பொய்ப் பிரசாரமும் இதற்குக் காரணமாக அமைந்தது” என்று தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !