Main Menu

“வாக்களித்த தமிழர்களை நட்டாற்றில் விட்டுள்ள கூட்டமைப்பு”

தமிழ் மக்­க­ளுக்கு காலத்­திற்கு காலம் வாக்­கு­று­தி­களை வழங்கி வரும் கூட்­ட­மைப்பு நல்­லாட்­சியில் அனைத்­தையும் பெற்­றுத்­த­ரு­வ­தாக கூறி ஈற்றில் தமி­ழர்­களை நட்­டாற்றில் விட்­டுள்­ள­தாக ஈழ­மக்கள் ஜன­நா­யக கட்­சியின் செய­லாளர் நாய­கமும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்ளஸ் தேவா­னந்தா வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய செவ்­வியில் தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு:

“13ஆவது திருத்­தத்­தினை உடன் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தாக உறு­தி­ய­ளிக்கும் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்கே எமது ஆத­ரவு”

கேள்வி:- அடுத்து ஜனா­தி­பதித் தேர்­த­லொன்று நடை­பெ­று­வ­தற்­கு­ரிய அதிக சாத்­தி­யப்­பா­டுகள் உள்­ள­நி­லையில் தாங்கள் ஆத­ரிக்கும் தரப்பில் எத்­த­கை­ய­தொரு வேட்­பாளர் நிறுத்­தப்­பட வேண்டும் என்று கரு­து­கின்­றீர்கள்?

பதில்:- நாடு யுத்­த­மற்ற சூழ­லிலும் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­த­ர­மான தீர்­வொன்­றைக்­கா­ணாமல் இனங்­க­ளுக்­கி­டையே நம்­பிக்­கை­யீ­னமும், முரண்­பா­டு­களும் தொடர்­கின்ற இந்தச் சூழ்­நி­லையை அர­சியல் தீர்­வொன்றின் ஊடாக தடுத்து நிறுத்தி நாட்டில் இன ஐக்­கி­யத்­தையும், தேசிய ஒரு­மைப்­பாட்­டையும் ஏற்­ப­டுத்தக் கூடிய தலை­மையை எதிர்­பார்க்­கின்றோம்.

அத்­த­கைய துணிச்­ச­லான ஒரு தலை­மைத்­துவம் நாட்­டுக்கு அமை­யும்­போ­துதான், நாடு எதிர்­கொண்­டுள்ள பொரு­ளா­தார நெருக்­க­டி­யி­லி­ருந்தும், புதிய பயங்­க­ர­வாத அச்­சு­றுத்­தலில் இருந்தும் நாட்­டையும், நாட்டு மக்­க­ளையும் பாது­காக்க முடியும். நிலை­யான ஆட்சி அமை­யும்­போ­துதான் நாடு முன்­னோக்கிச் செல்­ல­மு­டியும் என்­பது எமது நிலைப்­பா­டா­கின்­றது. 

கேள்வி:- இவ்­வி­டயம் குறித்து தாங்கள் ஆத­ரிக்கும் தரப்­புடன் பேச்­சுக்­களை நடத்­தி­னீர்­களா?

பதில்:- தமது கட்சி அல்­லது கூட்­ட­ணி­களின் சார்பில் யார் ஜனா­தி­பதி வேட்­பாளர் என்­பதை இது­வரை எவரும் தெளி­வாக வெளிப்­ப­டுத்­த­வில்லை. இது­வ­ரை­யுமே வேட்­பாளர் யார் என்­பது குறித்த ஊகங்­களே உலா வரு­கின்­றன. ஆனாலும் பிர­தான கட்­சி­க­ளுடன் பேச்­சு­ வார்த்­தை­களை நடத்­தி­வ­ரு­கின்றோம். 

கடந்த காலத்தில் பிர­தா­ன­மான அர­சியல் கட்­சிகள் ஜனா­தி­பதித் தேர்­தல்­களின் போது தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­டாமை தொடர்­பா­கவும் தமிழ் மக்­களை தொடர்ந்தும் ஜனா­தி­ப­தி­களும், ஆட்­சி­யா­ளர்­களும் ஏமாற்றி வந்­துள்­ளமை தொடர்­பா­கவும் எமது அதி­ருப்­தி­க­ளையும் நாம் சுட்­டிக்­காட்­டி­யுள்ளோம்.

நல்­லாட்சி என்று ஆட்சி பீட­மே­றி­ய­வர்­களும், அவர்­களை ஆட்­சியில் அமர்த்­தி­ய­வர்­களும் கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போதும், அதன் பின்னர் நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­த­லின்­போதும் தமிழ் மக்­க­ளுக்கு அதி­க­மான வாக்­கு­று­தி­களை வழங்­கி­ய­துடன், நம்­பிக்­கை­யையும் கொடுத்­தார்கள்.

அதில் தென்­னி­லங்கை ஆட்­சி­யா­ளர்­களை விடவும் அவர்­க­ளுக்­காக வக்­கா­ளத்து வாங்­கிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரே இனப்­பி­ரச்­சி­னையை சமஷ்டி அடிப்­ப­டையில் தீர்ப்­ப­தா­கவும், போர்க் குற்­றங்­களை சர்­வ­தேச நீதிப் பொறி­மு­றையை ஏற்­ப­டுத்தி விசா­ரிப்­ப­தா­கவும், வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களை கண்­டு­பி­டித்துத் தரு­வ­தா­கவும், தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு பொது­மன்­னிப்பு வழங்கி விடு­தலை பெற்­றுத்­த­ரு­வ­தா­கவும், படை­யினர் வச­முள்ள எமது மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களை மீட்டுத் தரு­வ­தா­கவும், எமது இளைஞர், யுவ­தி­க­ளுக்கு ஆயி­ரக்­க­ணக்­கான வேலை வாய்ப்­பு­களைப் பெற்­றுத்­த­ரு­வ­தா­கவும் வாக்­கு­றுதி வழங்­கி­னார்கள்.

ஆனால் இந்த ஆட்­சிக்­காலம் நிறை­வுக்கு வரக்­கூ­டிய சூழலில் இப்­போது ஒரு ஜனா­தி­பதித் தேர்­தலும் அதைத் தொடர்ந்து பாரா­ளு­மன்றத் தேர்­தலும் நடை­பெறக் கூடிய அர­சியல் மாற்­றங்­களும் நடந்­தேறிக் கொண்­டி­ருக்கும் நிலை­யிலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரால் தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட எந்­த­வொரு வாக்­கு­று­தியும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. தமிழ் மக்கள் நம்­ப­வைக்­கப்­பட்டு ஏமாற்­றப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்.

என­வேதான் தமிழ் மக்­க­ளுக்கு அர­சியல் தீர்வு கிடைக்­காமல் போன­தற்கும், தமிழ் மக்­களின் பிர­தான பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டா­ம­லி­ருப்­ப­தற்கும் தென்­னி­லங்கை ஆட்­சி­யா­ளர்கள் மட்டும் கார­ண­மல்ல. காலத்­திற்குக் காலம் தமிழ் மக்­களின் வாக்­கு­களை அப­க­ரித்து அர­சியல் சுய­லா­பங்­களை அனு­ப­வித்­து­விட்டு தமி­ழர்­களை நட்­டாற்றில் விட்ட பெரும் துரோ­கத்தைச் செய்து, பிரச்­சி­னை­களை தீர்க்க சந்­தர்ப்­பங்கள் கிடைத்தும் அதை துஷ்­பி­ர­யோகம் செய்த தமிழ்த் தலை­மை­க­ளுமே காரணம் என்­பதை நான் தொடர்ச்­சி­யாக கூறி­வ­ரு­கின்றேன். தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு ஆத­ர­வாக அதா­வது யானைக்கு தும்­பிக்­கை­யாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர், தமிழ் மக்­க­ளுக்கு நம்­பிக்­கை­யாக இருக்­க­வில்லை 

கேள்வி:- தென்­னி­லங்கை கட்­சி­க­ளோடு ஜனா­தி­பதித் தேர்தல் குறித்து பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்­டி­ருப்­ப­தாகக் கூறு­கின்­றீர்கள். அப்­பேச்சு வார்த்­தை­களில் தாங்கள் முன்­வைத்த பிர­தான நிபந்­த­னைகள் என்ன? அவை ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­னவா?

பதில்:- எமது நிபந்­த­னைகள் ஐந்து வரு­டங்­க­ளுக்கு ஒரு முறை மாற்­ற­ம­டை­வ­தல்ல. நாம் ஐக்­கிய இலங்­கைக்குள் சமா­தான சக­வாழ்­வையே ஆரம்­பத்­தி­லி­ருந்து வலி­யு­றுத்தி வரு­கின்றோம். தமிழ் மக்கள், தமி­ழர்­க­ளாக இருக்கும் அதே­வேளை, இலங்­கை­யர்­க­ளா­கவும் இருக்­கவே விரும்­பு­கி­ன­் றார்கள், தமி­ழர்­க­ளாக இருப்­ப­தற்­காக இலங்­கையர் என்­பதை விட்டுக் கொடுப்­ப­தற்கோ, இலங்­கையர் என்­ப­தற்­காக தமி­ழர்கள் என்­பதை விட்­டுக்­கொ­டுப்­ப­தற்கோ தமிழ் மக்கள் ஒரு­போதும் தயா­ராக இல்லை என்­ப­தையே எல்லாத் தரப்­பு­க­ளி­டமும் நாம் வலி­யு­றுத்­து­கின்றோம்.

தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வொன்று காணப்­ப­டு­வ­தற்கு இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்தைத் தொடர்ந்து ஏற்­ப­டுத்­தப்­பட்ட 13ஆவது திருத்தச் சட்­ட­மா­னது ஏற்­க­னவே இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டி­ருப்­பதால், உட­ன­டி­யாக அதை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தி­லி­ருந்து ஆரம்­பித்து நிலை­யான தீர்­வை­நோக்கி முன்­னேற முடியும் என்­பதே எமது நடை­மு­றைச்­சாத்­தி­ய­மான நம்­பிக்­கை­யாகும். இதையே நாம் வலி­யு­றுத்­து­கின்றோம்.

அதே­நேரம் தமிழ் மக்கள் எதிர்­கொண்­டுள்ள ஏனைய கோரிக்­கைகள் தொடர்­பிலும் அர­சியல் ரீதி­யாக குறிப்­பிட்ட காலப்­ப­கு­திக்குள் தீர்­வு­களைப் பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும் என்ற உத்­த­ர­வாதம் எமக்குக் கொடுக்­கப்­பட வேண்டும் என்­ப­தையும் வலி­யு­றுத்­து­கின்றோம். இந்தப் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வா­னது புதிய ஜனா­தி­பதி பதவி ஏற்­றதன் பின்னர் ஆரம்­பிக்­கப்­பட வேண்டும் என்றும், புதிய ஆட்சி ஏற்­ப­டுத்­தப்­பட்டு ஆறு மாதம் அல்­லது ஒரு வரு­டத்­திற்குள் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு, தீர்­வு 

கா­ணப்­பட வேண்டும் என்­பதை எமது முதன்­மை­யான நிபந்­த­னை­யா­கவே முன்­வைக்­கின்றோம்.

கேள்வி:- தாங்கள் ஆத­ரிக்கும் தரப்பு ஒட்­டு­மொத்­த­மாக சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்கு எதி­ரான   நிலைப்­பாட்­டினைக் கொண்­டி­ருப்­ப­தா­கவும் தமிழ், முஸ்லிம் தரப்­புக்கள் ஐ.தே.க தலை­மை­யி­லான கூட்­ட­ணி­யையே ஆத­ரிப்­ப­தற்கு அதி­க­ளவு சாத்­தி­யப்­பா­டுகள் உள்ள நிலையில் தங்கள் ஆத­ரவு தரப்பின் வெற்றி சாத்­தி­ய­மா­குமா? 

பதில்:- நாங்கள் இது­வரை யாரை ஆத­ரிக்­கப்­போ­கின்றோம் என்­பதை தீர்­மா­னிக்­க­வில்லை. இவ்­வி­ட­யத்தில் நாங்கள் அவ­ச­ரப்­பட முடி­யாது. ஏன் என்றால் நாங்கள் தமிழ் மக்­க­ளிடம்  ஆட்­சி­யா­ளர்­களை நம்­புங்கள் என்றோ, அர­சு­களை நம்­புங்கள் என்றோ கூறு­வ­து­மில்லை. பின்னர் கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றாமல் இருந்­து­விட்டு, ஜனா­தி­பதி ஏமாற்­றி­விட்டார் என்றோ, பிர­தமர் நம்­பிக்­கைத்­து­ரோகம் செய்­து­விட்டார் என்றோ  புலம்­பு­வ­து­மில்லை.

யார் யாரை ஆத­ரித்­தாலும் கடந்த காலத் தவ­று­க­ளையும், படிப்­பி­னை­க­ளையும் கவ­னத்தில் கொண்டு தமிழ் மக்கள் எதிர்­கா­லத்­திற்­கான தீர்­மா­னத்தை எடுக்­க­வேண்டும். அவ்­வா­றான தெளி­வான தீர்­மா­னத்தை எடுப்­பார்கள் என்றும், பல­மான சூழலில் எமது மக்­க­ளுக்கும், மண்­ணுக்கும் பணி செய்­வ­தற்கு எமக்கு தமிழ் மக்கள் ஆத­ர­வ­ளிப்­பார்கள் என்றும்  நம்­பு­கின்றேன். எமது கரங்­களை பலப்­ப­டுத்­தினால் அது தமிழ் மக்­க­ளுக்கே பயன்­க­ளாக மாறும் என்­பதே எமது உத்­த­ர­வா­த­மாகும்.

கேள்வி:- ஜனா­தி­பதித் தேர்தல் மற்றும் வேட்­பாளர் தொடர்பில் தமிழ்த் தரப்­புக்கள் தமிழ் மக்கள் மத்­தியில் பல்­வேறு கருத்­துக்­களை பிரஸ்­தா­பிக்க ஆரம்­பித்­துள்ள நிலையில் தாங்கள் என்ன கூற விழை­கின்­றீர்கள்?

பதில்:- தமிழ் மக்கள் தேர்­தல்­க­ளி­லி­ருந்து ஒதுங்கி இருப்­பதால் எவ்­வி­த­மான நன்­மை­களும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை. பொய்­யான வாக்­கு­று­தி­க­ளையும், நிறை­வேற்ற முடி­யாத வாக்­கு­று­தி­க­ளையும் அள்­ளி­வீசும் கப­ட­தா­ரி­க­ளையும், அவர்­களின் உசுப்­பேற்­றல்­க­ளையும் நம்பி அதற்கு எடு­ப­டாமல், மக்­க­ளோடு வாழ்ந்­து­கொண்டு, கிடைத்த சந்­தர்ப்­பங்­களைப் பயன்­ப­டுத்­தியும், சந்­தர்ப்­பங்­களை உரு­வாக்­கியும் தம்மால் முடிந்த சேவையை மக்­க­ளுக்­காக செய்­த­வர்­க­ளுக்கு ஒரு வாய்ப்பை வழங்கும் தீர்­மா­னத்­தையே தமிழ் மக்கள் எடுக்­க­வேண்டும்.

கேள்வி:- இனப்­பி­ரச்­சினை தீர்வு முதல் அனைத்து விட­யங்­க­ளிலும் தென்­னி­லங்கை தலை­வர்கள் மீது தமிழ் மக்­களின் நம்­பிக்கை வலு­வி­ழந்­துள்ள நிலையில், தொடர்ந்தும் எந்த அடிப்­ப­டையில் அவர்கள் அபி­லா­ஷை­களை நிறை­வேற்­று­வார்கள் என்ற எதிர்­பார்ப்­பு­ட­னான நம்­பிக்கை கொள்ள முடியும்? 

பதில்:- தமிழ் மக்கள் அர­சு­களை நம்­புங்கள் என்றோ, அவர்கள் கொடுக்கும் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றித் தரு­வ­தற்­கான உத்­த­ர­வா­தத்தை ஏற்­றுக்­கொள்­ளுங்கள் என்றோ கூறு­வ­தற்கோ நான் ஒரு­போதும் தயா­ராக இல்லை. நாம் வழங்கும் வாக்­கு­று­திகள் நடை­முறைச் சாத்­தி­ய­மா­ன­வை­யாகும். அதற்கு பொறுப்பை நாமே ஏற்­றுக்­கொள்­கின்றோம். 

வாக்­கு­று­தி­களை முன்­வைத்து மக்­க­ளிடம் ஆணை­கேட்கும் போது மக்கள் எமக்கு வாக்­க­ளிக்கும் அதே­வேளை, நாம் குறிப்­பிடும் வேட்­பா­ள­ருக்கும் தமது ஆணையை வழங்­கு­வார்­க­ளானால், மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை உரிய காலத்­திற்குள் நிறை­வேற்றித் தரும் பொறுப்பை நாமே நிறை­வேற்­றுவோம்.

கேள்வி:- தங்­க­ளுக்கும் ஐ.தே.கட்சி தலை­மை­யி­லான கூட்­ட­ணிக்கும் இடை­யிலும் இர­க­சி­யப்­பேச்­சுக்கள் நடை­பெற்­ற­தாக கூறப்­ப­டு­கின்ற நிலையில் அவை தோல்­வி­ய­டைந்­த­மைக்­கான காரணம் என்ன? 

பதில்:- நாம் யாரு­டனும் இர­க­சி­ய­மான பேச்­சு­வார்த்­தை­களை நடத்­து­வ­தில்லை. இர­க­சிய பேச்­சுக்­களை நடத்­தி­ய­தா­கவும், இத­யத்­தோடு இத­ய­மாக ஒப்­பந்­தங்­களைச் செய்து கொண்­ட­தா­கவும் கூறிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் தமிழ் மக்­க­ளுக்கு எதையும் பெற்­றுக்­கொ­டுக்­க­வில்லை. தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களே எமது பிர­தான பிரச்­சி­னைகள். எனவே அவை இர­க­சி­ய­மா­னவை அல்ல. ஆகவே தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் எவ­ரு­டனும் இர­க­சிய பேச்­சுக்­களை நடத்­த­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. மக்­களை ஏமாற்­றவும், தமது சுய­லா­பங்­களை அடைந்து கொள்­ள­வுமே அவ்­வா­றான இர­க­சிய பேச்­சுக்கள் கூட்­ட­மைப்­புக்கு உத­வி­யி­ருக்­கின்­றன.

எமக்கு தனிப்­பட்ட நலன்கள் தொடர்­பாக எவ­ரு­டனும் இர­க­சியப் பேச்­சுக்கள் நடத்­த­வேண்­டிய தேவை இல்லை. தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளையும் இர­க­சி­ய­மாக பேச வேண்­டிய தேவை இல்லை. அவ்­வா­றான இர­க­சிய பேச்­சுக்­களால் எதுவும் ஆகப்­போ­வ­தில்லை. அவ்­வா­றான இர­க­சியப் பேச்­சுக்கள் தமிழ் மக்­க­ளுக்கும், சிங்­கள மக்­க­ளுக்கும் தேவை­யற்ற சந்­தே­கங்­க­ளையே ஏற்­ப­டுத்தும்.

நாம் நடை­மு­றைச்­சாத்­தி­ய­மான பேச்­சு­வார்த்­தை­க­ளையே நடத்­து வோம். நிலவைப் பிடுங்கி பூமியில் நட­வேண்டும் என்றோ, நட்­சத்­தி­ரங்­களை எடுத்­து­வந்து வீட்­டுக்­ கூ­ரை­களில் பூட்­டி­வைக்க வேண்டும் என்றோ யாரு­டனும் அசாத்­தி­ய­மான நிபந்­த­னை­களை முன்­வைத்துப் பேசு­வ­தில்லை. எனவே, யாரு­ட­னான எமது பேச்­சு­வார்த்­தை­களும் தோல்­வி­ய­டைய வாய்ப்­பில்லை.

கேள்வி:- இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வுக்கு 13ஆவது திருத்­தச்­சட்­டத்தின் பிர­காரம் அமு­லாக்­கப்­பட்­டுள்ள மாகாண சபைகள் முறை­மையே ஆரம்­ப­புள்ளி என்ற நிலைப்­பாட்­டி­லி­ருக்கும் தாங்கள் அவற்­றுக்­கான தேர்தல் தாம­தப்­ப­டுத்­தப்­பட்டுக் கொண்­டி­ருப்­பது பற்றி கரி­சனை கொண்­டுள்­ளீர்­களா?

பதில்:- மாகா­ண­ச­பை­க­ளுக்­கான தேர்­தல்கள் உரிய காலத்தில் நடத்­தப்­பட்டு மக்கள் பிர­தி­நி­தி­களால் அந்த சபைகள் நிர்­வ­கிக்­கப்­பட வேண்டும். மக்கள் மீது அக்­க­றை­யுள்ள சரி­யான மக்கள் பிர­தி­நி­தி­களால் மாகா­ண­ச­பை­களும், உள்­ளூ­ராட்சி சபை­களும் நிர்­வ­கிக்­கப்­ப­டும்­போதே மக்கள் தமது பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வு­களை தமது பிர­தி­நி­திகள் ஊடாக தீர்த்­துக்­கொள்ள முடியும். 

அதி­கா­ரிகள், ஆணை­யா­ளர்கள், ஆளு­நர்கள் நிர்­வா­கங்­களை நடத்­தும்­போது, மக்­களின் கோரிக்கைகள், தேவைகள் உரிய காலத்தில், உரிய தீர்வைப் பெற்­றுக்­கொள்ள முடி­யாத நிலை­மையே இருக்கும். எனவே மாகா­ண­ச­பை­க­ளுக்கு காலம் தாம­திக்­காமல் தேர்­தல்­களை நடத்த வேண்டும். 

தேர்தல் முறைமை தொடர்­பாக பல குழப்­பங்கள் இருக்­கின்­றன. எல்லை நிர்­ண­யங்கள் தொடர்­பாக சிறிய கட்­சி­க­ளி­டையே கருத்து வேறு­பா­டுகள் இருக்­கின்­றன. எனவே புதிய தேர்தல் முறை­மையில் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான சூழல் ஏற்­ப­டும்­வரை காலத்தை இழுத்­த­டிப்புச் செய்­யாமல், இல்­லாது செய்­யப்­பட்ட பழைய தேர்தல் முறை­மையை மீண்டும் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றிக்­கொண்டு பழைய முறை­மை­யி­லேனும் தேர்­தலை நடத்த வேண்டும் என்­பதே எமது கோரிக்­கை­யாகும்.

கேள்வி:- மாகாண சபைத் தேர்தல் நடத்­தப்­ப­டு­கின்­ற­போது வடக்கு மாகாண சபையின் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வதில் உறு­தி­யாக இருக்­கின்­றீர்­களா?

பதில்:- மாகா­ண­சபை முறை­மையை பாது­காத்து பலப்­ப­டுத்­து­வதன் ஊடாக தமிழ் மக்கள் தமது அர­சியல் இலக்கை அடைந்­து­கொள்ள முடியும் என்ற நம்­பிக்கை எமக்கு இருக்­கின்­றது. அந்த வகையில் மாகா­ண­ச­பையை பொறுப்­பேற்று அதை நிறை­வாக செயற்­ப­டுத்­து­வதன் ஊடாக வட மாகா­ணத்தில் பாலாறும், தேனாறும் ஓடச் செய்வேன் என்று கூறி­வந்­தி­ருக்­கின்றேன்.

எமது மாகா­ணத்தின் எதிர்­காலம் குறித்து திட்­ட­மிட்டு அபி­வி­ருத்­தி­யாலும், பொரு­ளா­தா­ரத்­தாலும் மாகா­ணத்தை தூக்கி நிறுத்­தினால், நாம் கனவு காணும் தமிழர் தேசத்தை எமது காலத்­தி­லேயே உரு­வாக்க முடியும் என்ற அசைக்­க­மு­டி­யாத நம்­பிக்­கை­யு­ட­னேயே எனது அர­சியல் முயற்­சிகள் தொடர்­கின்­றன.

நான் முத­ல­மைச்­ச­ராக இருந்து சாதிக்க நினைக்கும் காரி­யங்­களை சாத்­தி­யப்­ப­டுத்தும் விருப்­பத்தை தமிழ் மக்­களும் வெளிப்­ப­டுத்­து­வார்­க­ளானால், அதற்­காக நாம் காட்டும் திசை­வழி நோக்கி ஓர­ணி­யாகத் திரண்டு மக்கள் எமது கரங்­களை பலப்­ப­டுத்­து­வார்­க­ளானால் முத­ல­மைச்சர் என்ற பொறுப்பை ஏற்­றுக்­கொள்ள நான் பின்­நிற்­கப்­போ­வ­தில்லை.

துர­திர்ஷ்­ட­வ­ச­மாக கடந்­த­முறை வடக்கு மாகா­ண­ச­பையை பொறுப்­பேற்­ற­வர்கள் தமது ஆற்­ற­லற்ற தன்­மை­யாலும், அதி­கார துஷ்­பி­ர­யோ­கங்­க­ளாலும், மோச­டி­க­ளாலும் அந்த சந்­தர்ப்­பத்தை துஷ்­பி­ர­யோகம் செய்­தி­ருக்­கின்­றார்கள்.  தமது இய­லா­மை­க­ளையும், துஷ்­பி­ர­யோ­கங்­க­ளையும் மறைப்­ப­தற்­காக தம்­மைத்­தாமே விசா­ரிக்கும் விசா­ரணை ஆணைக்­கு­ழுக்­க­ளையும் அமைத்து விசா­ரணை நடத்­திய கப­டத்­த­னங்­க­ளையும் அவர்­களே அரங்­கேற்­றி­னார்கள்.

மாகா­ண­ச­பையில் அதி­கா­ரங்கள் இல்லை என்றும், மாகா­ண­சபை ஊடாக எதையும் சாதிக்­க­மு­டி­யாது என்றும் கூறிய இவர்­களே, மீண்டும் மாகா­ண ­சபைத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கும், மீண்டும் மாகா­ண­ச­பையில் அதி­கா­ரத் துஷ்பிர­யோ­கங்­களைச் செய்­வ­தற்கும் முற்­ப­டு­கின்­றார்கள்.

அதற்­காக தனி­நபர் கட்­சி­களை உரு­வாக்­கு­வதும், அந்தக் கட்­சி­களை இணைத்து அதை ஒரு மெகா கூட்­டணி என்று கூறு­வதும், அதுவே தமிழ்த் தேசிய இனத்தின் மாற்றுத் தலைமை என்றும் அவர்கள் நாளாந்தம் அறிக்கைகள் விடுவதையும், அதை சில ஊடகங்கள் முன்னுரிமைப்படுத்தி வியாபாரம் செய்வதை பார்க்கும்போது, இது தமிழ் மக்களின் தலைவிதி என்றே எண்ணத் தோன்றுகின்றது.

கேள்வி:- தாங்கள் அரசியலில் இருந்து ஒதுங்குவதென்ற கருத்துப்பட சில கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றமைக்கான பின்னணி என்ன?

பதில்:- அது உண்மைதான் தமிழ் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பப் போராளிகளில் நானும் ஒருவன் என்றவகையில், எமது தமிழ் மக்களின் அரசியல் உரிமையை வென்றெடுக்கும் இலக்கு நோக்கி தொடர்ந்து போராட வேண்டிய தேவையை உணர்ந்தே தேசிய அரசியலில் ஈடுபட்டு தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றேன்.

இதுவரையும் எமக்குக் கிடைத்த அரசியல் பலத்தையும், வாய்ப்புகளையும் பயன்படுத்தியும், சந்தர்ப்பங்களை உருவாக்கியும் என்னால் முடிந்ததை இதுவரையும் அதிகமாகச் செய்திருந்தாலும், இன்னும் அதிகமாகச் செய்யவேண்டிய தேவை இருப்பதையும் ஏற்றுக்கொள்கின்றேன். எனவே அதைச் செய்வதற்கான மக்கள் ஆணை எதிர்வரும் சந்தர்ப்பங்களில் கிடைக்கும் என்று நம்புகின்றேன். 

இந்த நிலையிலேயே எதிர்காலத்தில் வரவிருக்கும் சந்தர்ப்பங்களில் தமிழ் மக்கள் எனக்கு அரசியல் ரீதியாக எதிர்பார்க்கும் பலத்தை வழங்காவிட்டால், தொடர்ந்தும் நான் அரசியலில் இருப்பதில் அர்த்தமில்லை என்பதாலும், வேறு தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களைப்போல் ஓய்வுகால அரசியல் நடத்தவும் நான் விரும்பவில்லை என்பதையே அவ்வாறு கூறியிருந்தேன். 

நேர்­காணல்:- ஆர்.ராம்

பகிரவும்...