வாகரை பிரதேசம் தமிழர்களிடமிருந்து பறிபோகும் நிலையேற்படும்!- மக்கள் கவலை

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசம் தமிழர்களிடம் இருந்து பறிபோகும் நிலையேற்படும் என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமது பகுதிகளில் உள்ள அரச காணிகளை பிற சமூகத்திற்கு தாரைவார்க்கும் செயற்பாடுகளை பிரதேச செயலகத்தில் உள்ளவர்கள் மேற்கொள்வதாக சுட்டிக்காட்டியே மக்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாங்கேணி கிராமம் பாரிய அனர்த்தங்களை எதிர்நோக்கும் அபாயத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த கிராமத்தின் வெள்ளநீர் வழிந்தோடும் பகுதி அடைக்கப்பட்டுள்ள நிலையிலேயே மக்கள் இவ்வாறு அச்சம் வெளியிட்டுள்ளனர்.

மழை காலங்களில் மாங்கேணி பிரதேசத்தில் வெள்ளம் ஏற்படும் போதிலும், அது பிரதான வீதியூடாகவுள்ள கால்வாய் ஊடாக கடலுக்கு செல்வதனால் ஓரளவு வெள்ள அபாயம் தடுக்கப்பட்டது.

ஆனால் கடந்த சில மாதங்களாக குறித்த பகுதியை சிலர் தங்களது நிலம் என அடைத்துள்ளதனால் மழை காலத்தில் பாரிய நெருக்கடியை மக்கள் எதிர்கொள்ள நேரிடும் எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமது பகுதிகளில் உள்ள அரச காணிகள் மாற்று இன சமூகத்திற்கு தாரைவார்க்கும் செயற்பாடுகளை பிரதேச செயலகத்தில் உள்ளவர்கள் மேற்கொள்வதாகவும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமது எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கப்பட்ட காணிகள் இன்று பணத்திற்காக மாற்று இனங்களுக்கு தாரைவார்க்கும் செயற்பாடுகள் வேகமாக முன்னெடுக்கப்படுவதாகவும் எதிர்காலத்தில் வாகரை பிரதேசம் தமிழர்களிடம் இருந்து பறிபோகும் நிலையேற்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இக்காணி அபகரிப்பு தொடர்பில் பல தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் குறித்த பிரச்சினை தொடர்பில் யாரும் கவனத்தில் கொள்ளவில்லை என பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் குறித்த பகுதியை பார்வையிட்டதுடன் பிரதேச மக்களுடன் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டார்.

வாகரை பிரதேசத்தில் பறிபோகும் காணி தொடர்பில் கவனம் செலுத்திவருவதாகவும் இது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது உறுதியளித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !