வளைகுடா நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை
சமூக வலைதளங்களில் போலி செய்திகள் பரவி, மதரீதியாகப் பிரச்சினையாக்கப்படும் நிலையில், வளைகுடா நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தி உள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டெல்லி தப்லீக் ஜமாத்மாநாட்டில் பங்கேற்ற இஸ்லாமியர்களால்தான் நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவுவதாக செய்திகள் வெளியாயின.
அதைத்தொடர்ந்து கொரோனா வைரஸை தப்லீக் உறுப்பினர்கள் பரப்பி வருகின்றனர் என்று இந்துக்கள் கூறுவதாக ட்விட்டர் உட்பட சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருவதால் வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டது.
இது தொடர்பான விசாரணையில் குறித்த செய்திகள் உள்நோக்கத்துடன் பரப்பப்பட்டவை என்றும், போலி ட்விட்டர் கணக்குகளில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டது என்றும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, வளைகுடா நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடியும், அந்த நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
குறித்த பேச்சுவார்த்தையில், இதுபோன்ற போலி செய்திகள் மற்றும் தகவல்களால் வளைகுடா நாடுகளில் தங்கியுள்ள இந்தியர்களுக்கு மட்டுமன்றி இருநாட்டு உறவிலும் சிக்கலை ஏற்படுத்தும் நோக்கில் சில சமூக விரோத சக்திகள் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மேலும் இந்தியாவில் மே 3ஆம் திகதி வரையில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். அதன்பிறகு வளைகுடா நாடுகளில் தவிக்கும் இந்தியர்களை தாய்நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அத்துடன், வளைகுடா நாடுகளுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் தங்கு தடையின்றி இந்தியா வழங்கும். குறிப்பாக கொரோனா வைரஸுக்கு சிகிச்சை அளிக்க ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மற்றும் பாராசிட்டமால் மாத்திரைகள் அனுப்பி வைக்கப்படும்.
இது மனிதாபிமானம் மற்றும் வர்த்தக ரீதியிலாக இருக்கும்என்று வளைகுடா நாடுகளின் தலைவர்களிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.