Main Menu

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயப் பொங்கல் விழா: இம்முறை மக்கள் அனுமதியில்லை

முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று அச்சம் காரணமாக, இவ்வருடம் குறித்த பொங்கல் நிகழ்வு பாரிய அளவில் இடம்பெறமாட்டதெனவும், பாரம்பரிய வழிபாட்டுக் கிரிகை நிகழ்வுகள் மாத்திரமே இடம்பெறும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொங்கல் விழா தொடர்பாக நேற்று (புதன்கிழமை) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் மாவட்டசெயலர் க.விமலநாதன், மேலதிக மாவட்டசெயலர் க.கனகேஸ்வரன், சுகாதாரப்பணிப்பாளர், கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் மணிவண்ணன் உமாமகள், கரைதுறைப்பற்று பிரதேசசபைின் செயலாளர், பொரலிஸார், இராணுவத்தினர், கோயில் நிர்வாகத்தினர் எனப்பலரும் கலந்திருந்துகொண்டனர்.

இது தொடர்பாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கையில், “வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் இவ்வருடத்திற்கான வருடாந்த பொங்கல் நிகழ்வு ஜூன் மாதம் 8ஆம் திகதி இடம்பெறவிருக்கின்றது. அந்தப் பொங்கல் நிகழ்வினை நடத்துவதற்கு உரிய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

ஆனால், சமகாலத்தில் நிலவுகின்ற கொரோனா நோய் நிலைமையின் காரணமாக உலகத்தோடு நாம் ஒத்துப்போகவேண்டிய தேவைபற்றி தெளிவுபடுத்தப்பட்டது.

அதனடிப்படையில், சுகாதாரப் பகுதியின் ஆலோசனைகளை ஏற்று இந்த ஆண்டு பொங்கல் விழாவினை பாரிய பொங்கல்விழாவாக இல்லாமல், பாரம்பரிய ரீதியில் எடுக்கின்ற கிரிகைகளை மாத்திரம் ஆலயத்தில் செய்ய இருக்கின்றோம். அந்தவகையில் மக்கள் கூடுவது தவிர்க்கப்பட்டிருக்கின்றது.

எனவே, அம்பாள் மீது மிகுந்த பக்திகொண்ட பக்தர்கள், நாட்டின் நிலைமையைச் சிந்தித்துப்பதுடன், நோயினைப் பரப்புபவராகவோ, ஏற்பவராகவோ இருக்கக் கூடாது என்பதனைக் கருத்தில்கொண்டு, இவ்வாண்டு பொங்கல் நிகழ்வில் ஆலயத்தில் கூடவேண்டாமென மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்” என்றனர்.

இதேவேளை இதுகுறித்து மாவட்ட செயலாளர் க.விமலேஸ்வரன் தெரிவிக்கையில்,

“மக்கள் கூட்டங்கூடுவதைத் தவிர்ப்பதற்காக, குறித்த பொங்கல் கிரிகைகள் இடம்பெறும் நாட்களில், இந்தப் பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்த ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தற்போதுள்ள கொரோனாத்தொற்று நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, போலீசார், இராணுவத்தினர், மற்றும் மாவட்டசெயலகம் வழங்கும் அறிவுறுத்தல்களையும், ஆலோசனைகளையும் ஏற்று பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்” தெரிவித்தார்.

பகிரவும்...
0Shares