வர்த்தக உடன்பாட்டை இப்போதே செய்து கொள்வது நல்லது – சீனாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவுடன் இப்போதே வர்த்தக உடன்பாட்டைச் செய்துகொள்வது சீனாவுக்கு நல்லது என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
தமது இரண்டாவது தவணைக் காலத்தில் உடன்பாடு பற்றிப் பேசத் தேவைப்பட்டால் அது சீனாவுக்கு மேலும் பாதகமாக இருக்கும் என்று அவர் சொன்னார்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போரால் உலகப் பொருளியல் பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.
இருதரப்புக்கும் இடையே அண்மையில் நடந்த பேச்சில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
இருதரப்பும் மீண்டும் பின்னொரு தேதியில் சந்திக்கும் என்று சீனத் தரப்பின் தலைமைப் பேராளர் தெரிவித்தார்.
அண்மையில் நடந்த பேச்சில் சீனாவிற்குச் சாதகமான அம்சம் ஏதும் இல்லாத காரணத்தால் அது அடுத்த தேர்தல்வரை காத்திருக்கக்கூடும் என்று திரு.டிரம்ப் அவரின் Twitter பக்கத்தில் எழுதியிருந்தார்.
அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வென்றால், சீனா தொடர்ந்து அமெரிக்காவிடமிருந்து ஆண்டுக்கு 500 பில்லியன் டாலர் பெறக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் தாம்தான் அடுத்தமுறையும் வெல்லப் போவதாக அதிபர் டிரம்ப் கூறினார். அதனால் சீனா இப்போதே வர்த்தக உடன்பாடு குறித்து முடிவெடுப்பது நல்லது என்றார் டிரம்ப்.