Main Menu

வரும் ஆண்டுகளில் நெருக்கமாகப் பணியாற்ற விரும்புகிறோம் – மோடிக்கு சம்பந்தன் வாழ்த்து

இந்திய மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருக்கும் பாரதிய ஜனதாக் கட்சிக்கும், பிரதமர் மோடிக்கும் இலங்கை தமிழர்கள் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன். 

மோடிக்கு ஆங்கிலத்தில் அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: 

“நடந்த முடிந்த பொதுத் தேர்தலில் இரண்டாவது முறையாக பதவியைப் பெறுவதற்கு மக்களின் நம்பிக்கையை வெகுவாகப் பெற்றிருக்கும் மாட்சிமை தாங்கிய தங்களுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். 

இந்திய மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய முயலும் நிலையில் உங்களையும், உங்கள் அரசையும் நாங்கள் வாழ்த்துகிறோம். வரக்கூடிய ஆண்டுகளில் உங்கள் தலைமையின் கீழ் புதிய மைல்கற்களை எட்டுவதற்கு உங்களுக்கும் உங்கள் மக்களுக்கும் எங்கள் பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும். 

இலங்கைக்கும், அதன் மக்களுக்கும், குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கும் உங்கள் அரசாங்கமும், இந்தியாவும் அளித்த எல்லா ஆதரவுக்கும் உண்மையான பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவிக்க இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். 

இலங்கையில் தேசியப் பிரச்சனைக்கு நீதி, சமத்துவம், எல்லோரையும் உள்ளடக்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிரந்தரத் தீர்வு காணவும், தெற்காசியாவில் அமைதி, வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை அடையவும் வரும் ஆண்டுகளில் உங்களோடு நெருக்கமாகப் பணியாற்ற விரும்புகிறோம். 

மீண்டும் ஒரு முறை, தமிழ் பேசும் மக்கள் சார்பில் உங்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளும், உங்கள் உயர்ந்த பதவியில் வரும் ஆண்டுகளில் சிறப்படைவதற்கு நல்வாழ்த்துகளும்.” என்று எழுதி கையெழுத்திட்டுள்ளார் சம்பந்தன். 

பிபிசி