Main Menu

வருங்காலம் வலுவாக…… கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A)

தமிழுக்காய் தமை ஈர்ந்து
தமிழ்க் காதலால் தம் காதல் துறந்து
எமக்காய் மரணித்த மறவர்களை
திங்களாம் கார்த்திகையில்
காந்தள் மலர் தூவி அர்ச்சிப்போம்
காத்திரமாய் காத்திடுவோம் அவர்தம் உறவுகளை !

வருங்காலம் வலுவாக
எதிர்காலம் சிறப்பாக
வாழ்வாதாரம் மேலோங்க
நிகழ் காலத்தில் உதவிடுவோம்
நித்திலம் காத்திட்ட மறவர் குடும்பங்களை
காத்திரமாய் காத்திடுவோம்
கரம் தனைக் கொடுத்து
கவலையைப் போக்கிடுவோம் !

இளமைக் காலத்தை தொலைத்து
இனிமை வாழ்க்கையை இழந்து
வறுமைக் கோலத்தில் வாழ்ந்து
வலுவிழந்து வாழ்விழந்து
நிலைகுலைந்து தடுமாறி
வாழ்வா ? சாவா ?என்னும் போராட்டத்தில்
நாளினைக் கழிக்கும் உறவுகளுக்கு
நல்லாதரவைக் கொடுத்திடுவோம் நாமும் !

வாழும் வயதினில் துன்ப துயரங்கள்
பாழும் உலகினில் புறக்கணிப்புக்கள்
மாழும் உயிரைக் கையில் பிடித்தபடி
நாழும் பொழுதும் ஏங்கித் தவிக்கும்
மறவர்களின் உறவுகளை மறக்காது
மறத் தமிழராய் நாம் கரம் கொடுத்திடுவோம் !

வருங்காலம் வலுப்பெறட்டும்
எதிர்காலம் செழிப்பாகட்டும்
இனிமைக் காலம் பிறக்கட்டும்
இடர்கள் எல்லாம் விலகட்டும்
இரு கரமும் கொடுக்கின்றோம்
இயலும் வரைக்கும் தொடர்கின்றோம்
உங்கள் வாழ்க்கை வளம் பெறட்டும்
உங்கள் கனவுகளும் நனவாகட்டும் !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 22.11.2018

https://www.youtube.com/watch?v=oaEc91BrqCo&feature=share