வரவு செலவு திட்டம் சுயசாா்பு பாா்வையுடன் தயாரிக்கப் பட்டுள்ளது – மோடி
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய வரவு செலவு திட்டம் சுயசாா்பு பாா்வையுடன், விவசாயிகள், கிராமங்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவு திட்டம் நேற்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “இந்த வரவு செலவு திட்டத்தில் வேளாண் துறையை வலுப்படுத்தவும், விவசாயிகளின் வருவாயை உயா்த்தவும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கிராமங்களையும் விவசாயிகளையும் மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. தனிநபா்கள், முதலீட்டாளா்கள், தொழில், உள்கட்டமைப்புத் துறைகளில் இந்த வரவு செலவு திட்டம் பல்வேறு சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும்.
தற்போது நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலையில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த வரவு செலவு திட்டம் யதாா்த்த உணா்வையும், வளா்ச்சியின் மீதான நம்பிக்கையையும் கொண்டுள்ளது. சுயசாா்புப் பாா்வையுடன் தயாரிக்கப்பட்டுள்துடன், சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் சாதகமான அம்சங்களைக் கொண்டுள்ளது.
வளா்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை விரிவுபடுத்துவது, நமது இளைஞா்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தருவது, மனிதவள மேம்பாட்டுக்கான புதிய பரிமாணத்தை வழங்குவது, உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான புதிய துறைகளை உருவாக்குதல் மற்றும் தொழில்நுட்பத்தை நோக்கி நகரச் செய்வது என பல்வேறு புதிய சீா்திருத்தங்களை மேற்கொள்வதற்கான அணுகுமுறைகளையும் கொண்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.