வரலாற்றுப் பாடப்புத்தகத்தில் தமிழர் வரலாறு இருட்டடிப்பு – டக்ளஸ் தேவானந்தா!

நாட்டில் தமிழ் வரலாற்று நூல்களில் தமிழர் வரலாறு தொடர்ந்தும் இருட்டடிப்புச் செய்யப்பட்டு வருவதாக சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபாலசிறிசேனவுக்கு ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

தமிழ் மாணவர்களின் பாடசாலை வரலாற்றுப் புத்தகத்தில் தமிழர் வரலாறு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன், பௌத்த வரலாறே கற்பிக்கப்படுகின்றது.

இந்நிலை மாற்றப்பட்டு, தமிழ் மாணவர்களுக்கு தமிழர் வரலாறு கற்பிக்கப்படவேண்டியது முக்கியமாகும்.

தமிழ் வரலாற்று நூல்களில் இடம்பெறவேண்டிய விடயங்கள் தொடர்பாக துறைசார்ந்த தமிழ் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோரைக்கொண்டமைந்த குழு ஒன்றின் ஆலோசனைகள், பரிந்துறைகளை என்பவற்றைத் திரட்டித் தயாரிக்கப்பட்ட ஆவனச் சுருக்கத்தை இணைப்பாக அக்கடிதத்துடன் அனுப்பிவைத்துள்ளார்.

மேலும், தமிழ் மாணவர்களின் வரலாற்றுப் பாட நூல்களில் சிங்கள, பௌத்த மக்களின் வரலாறு தொடர்பான விடயங்களே உள்ளடக்கப்பட்டுள்ளன. தமிழர் வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

இன நல்லிணக்கம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற உயர் விழுமியங்களை முன்னெடுக்கின்ற காலகட்டத்தில் இந்நாட்டினுடைய வரலாறு பிழையாகவும் திரிபுபடுத்தப்பட்டும் மறைக்கப்பட்டும் உள்ள நிலைமைகள் சீர்செய்யப்படுமாகவிருந்தால் மாணவர்கள் நாட்டின் வரலாற்றை விஞ்ஞான ரீதியாகக் கற்பதுடன் உண்மைத்தன்மையையும் அறிந்து கொள்வார்கள் எனவும்  அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !