வரம்பு மீறிய செயல்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபடக் கூடாது – வெங்கையா நாயுடு
அவை நடவடிக்கைகளை தொலைப்பேசியில் பதிவு செய்வது உள்ளிட்ட வரம்பு மீறிய செயல்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபடக் கூடாது என மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.
மாநிலங்களவையில் தமிழக மீனவர் படுகொலை விவகாரம் தொடர்பான விவாதத்தைத் தொடர்ந்து பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொலைப்பேசியில் அவை நடவடிக்கைகளை, பதிவு செய்வதை காண முடிகிறது.
அண்மை நாட்களாக இது தொடர்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் பதிவு செய்த காணொலிகளை, சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர்.
இதுபோன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரம்பு மீறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நாடாளுமன்ற மாண்பிற்கு குந்தகம் விளைவிக்கின்ற செயல்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபடக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.