வதந்திகளுக்கு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைபாட்டை கூறமுடியாது
வதந்திகளுக்கு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைபாட்டை கூறமுடியாது முடியாது என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், எரிபொருள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
இலங்கையில் பாரதிய ஜனதா கட்சியை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படும் கூற்று தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இந்திய பாரதிய ஜனதா கட்சியை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக இந்திய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் அமித்ஷா எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக 2 நாட்கள் கடந்த போதிலும் இதுதொடர்பாக காணொளி எதுவும் கிடைக்கவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த கூற்று தொடர்பில் இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வ கருத்தை தெரிவித்தால் மாத்திரமே இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கருத்தை தெரிவிக்க முடியும் என்று அமைச்சர் கம்மன்பில சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், நாட்டு பற்றுள்ள மக்கள் வெளிநாட்டு அரசியல் கட்சிக்கு நாட்டில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கமாட்டார்கள் என தாம் திடமாக நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிய அரசியல் யாப்பு அலுவல்கள் தொடர்பாக அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், இதற்கான நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது. ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவின் தலைமையிலான புதிய அரசியல் யாப்பு வகுப்பு குழு நாட்டின் அரசியல் கட்சிகளை சந்தித்து அவர்களின் கருத்துக்களை பெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பகிரவும்...