வட – தென் கொரிய நாடுகளுக்கு புதிய எதிர்காலம்!- ஒப்பந்தம் கைச்சாத்து

வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னிற்கும் தென்கொாிய ஜனாதிபதி மூன் ஜே இன்னிற்கும் இடையே பரந்தளவிலான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

தென்கொாிய ஜனாதிபதி மூன் ஜே இன் வடகொரியாவிற்கு மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் செய்துள்ள நிலையில், தலைநகர் பியாங்யொங்கில் இன்று (புதன்கிழமை) குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கிம் ஜொங் உன்னுடனான சந்திப்பின்போது இரு நாடுகளும் ஏவுகணைப் பரிசோதனைகளை முற்றாக நிறுத்த தீர்மானித்துள்ளதாக தென்கொரியத் ஜனாதி மூன் தெரிவித்தார்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையே ரயில் சேவையினை ஆரம்பிக்கப் போவதாகவும், கொரியப் போரின் போது பிளவுபட்ட குடும்பங்களை ஒன்றிணைக்கும் செயற்பாட்டை மேற்கொள்ளப் போவதாகவும் தென்கொரியத் தலைவர் மூன் ஜே இன் குறிப்பிட்டார்.

இதேவேளை, இரு நாடுகளின் இராணுவங்களுக்கு இடையிலான சமாதானத்தைக் ஏற்படுத்தி ஒப்பந்தத்தை மேலும் மேம்படுத்தப் போவதாக வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன் தெரிவித்தார்.

வடகொரியாவிலுள்ள டொங்சான்ங் ரீ என்ற ஏவுகணைகளைப் பரிசோதிக்கும் மையத்தை நிரந்தரமாக மூடுவதற்கு வடகொரிய உடன்பட்டுள்ளதாக மூன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் 2032ஆம் ஆண்டு கோடை கால ஒலிம்பிக் போட்டிகளை இரு கொரிய நாடுகளும் இணைந்து நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய ஒப்பந்தமொன்றில் இரு கொரிய நாடுகளும் கைச்சாத்திட்டுள்ளன.

இதன்போது தென்கொரியத் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வடகொரிய இராணுவத்தின் தளபதியும் இணைந்து சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் குறிக்கோளிற்கு இணங்க, வடகொரியா ஏவுகணை பரிசோதனையை முற்றாக நிறுத்த தீர்மானித்துள்ளதோடு அமெரிக்க-வடகொரிய இரண்டாவது உச்சிமாநாட்டில் இரு நாடுகளுக்கும் இடையில் செயற்படும் பிரதான இடைப் பேச்சாளராக தென்கொரியா செயற்படுமென நம்பப்படுகின்றது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !