வட கொரிய ஏவுகணைத் தளத்தில் புதிய இயந்திரங்கள் சோதனை?
வட கொரிய ஏவுகணைத் தளத்தில் புதிய இயந்திரங்கள் சோதனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச ஊடகமாக CNN இனால் வெளியிடப்பட்டுள்ள ஒளிப்படங்களின் உதவியுடன் இந்த விடயம் கண்டறிப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வட கொரியாவின் சோஹே (Sohae) ஏவுகணைச் சோதனைத் தளம் அழிக்கப்பட்டு விட்டதாக அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து வடகொரியா அணுவாயுதத்தைக் களைவது தொடர்பான பேச்சுவார்த்தையை இந்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் ஆரம்பிக்க அமெரிக்கா தீர்மானித்திருந்தது.
எனினும், ஏவுகணைத் தளத்தில் புதிய இயந்திரங்கள் சோதனை செய்யப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் இதில் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அண்மைக்காலமாக வட கொரியா மீண்டும் ஏவுகணைகளை பரிசோதிப்பதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளினால் இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.