வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இராணுவம் உதவும்- யாழ்.இராணுவ கட்டளைத் தளபதி
வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, பொருளாதார ரீதியாக அவர்களை முன்னேற்ற இராணுவம் உதவுமென யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
மகளிர் தினத்தை முன்னிட்டு இராணுவத்தினரால் உலர் உணவு பொதி வழங்கும் நிகழ்வு இன்று (சனிக்கிழமை), யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இதன்போது குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரியந்த பெரேரா மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாணம்- சுன்னாகம் பகுதியில், வருமானம் குறைந்த குடும்பங்கள் மற்றும் குழந்தை பெற இருக்கும் தாய்மார்களுக்கு மகளீர் தினமான மார்ச் 8ஆம் திகதியை முன்னிட்டு, இராணுவத்தினரால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவத்தினரால் வருமானம் குறைந்த தலைமைத்துவ குடும்பங்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு போஷாக்கு உணவு பொதிகள். அத்தோடு குழந்தை பெறவுள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு இந்த உணவுப் பொருட்களை வழங்குவதில், யாழ்.இராணுவ கட்டளைத் தளபதி என்ற ரீதியில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இந்த பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு உதவிய அனைத்து இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் படையணி தளபதிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இலங்கையிலுள்ள அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது இலங்கை இராணுவத்தின் முக்கிய நோக்கமாகும்.
அதேபோலவே யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தலைமையகம், யாழ்ப்பாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி பொருளாதார ரீதியாக வடக்கு மக்களை முன்னேற்றுவதற்கான சகல வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க தயாராக உள்ளது.
அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் தேசிய பாதுகாப்பு மட்டுமல்லாது விவசாயம் மற்றும் பொது மக்களின் வாழ்வாதாரத்தை முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் மற்றும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை இராணுவத்தினர் முன்னெடுக்கும் நிலையில் இங்கு உள்ள படித்த முதியவர்களின் ஆலோசனைகளை பெற்று இராணுவத்தினராகிய நாங்கள், பல்வேறுபட்ட உதவிகளை பொதுமக்களுக்கு மேற்கொள்வதற்கு எந்நேரமும் தயாராக உள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.