வடக்கில் 10 நாட்களில் 380 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றல்

வடக்கில் கடந்த 10 நாட்களில் மாத்திரம் 380 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக வடக்கு சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 40 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் கடந்த 10 நாட்களில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும், மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் பெருந்தொகையான கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது. வவுனியா மாவட்டத்தில் குறைந்தளவு கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இதில், வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மாத்திரம் 200 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா பறிமுதல்செய்யப்பட்டது.

இச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என யாழ்ப்பாணத்தில் 29 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் வவுனியாவில் 4 பேரும், மன்னாரில் 4 பேரும், கிளிநொச்சியில் 3 பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த ஆண்டில் 2 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதனோடு தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்டதாகவும் ரொஷான் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !