வடக்கின் அபிவிருத்தி குறித்து விஜயகலா- மஹிந்த தரப்பிடையே வாய்த்தர்க்கம்

தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக இனியும் கூற முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கான அடிப்படை தேவைகள் வடக்கு, கிழக்கு, தெற்கு என பல்வேறு மாகாணங்களிலும் பூர்த்தி செய்யப்படாத நிலையில் காணப்படுவதாக மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்டு பேசிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ”உங்களது ஆட்சிக் காலத்தில் வடக்கிற்கு எவ்வித அபிவிருத்தியும் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால், நாம் ஆட்சிக்கு வந்த நான்கு வருடங்களில் வடக்கிற்கான பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து மன்றில் தொடர்ந்து உரையாற்றிய மஹிந்த அமரவீர, ”வடக்கில் எவ்வித பிரச்சினைகளும் இல்லையென்றால் அது மகிழ்ச்சியானது. அதனை ஜெனீவாவிற்கும் போய் சொல்லுங்கள். இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் வாய்களினால் கூறச் சொல்லுங்கள்.

வடக்கிற்கான அனைத்து வசதிகளையும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா செய்துக் கொடுத்துள்ளாரா என நாம் வடக்கு மக்களிடம் கேட்கவுள்ளோம். அவ்வாறு அவர் செய்திராவிடின் அவரை வடக்கிற்கு அனுமதிக்காதிங்கள்.

அவர் கூறுவதை வைத்து பார்க்கும்போது வடக்கு பூரணமாகியுள்ளது. ஆனால், தெற்கில் எமக்கு அந்த நிலை இல்லை. அவ்வாறாயின் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக இனியும் கூற முடியாது. வடக்கில் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !