லொஹான் பயன்படுத்திய கார் தொடர்பில் நீதிமன்றில் வௌியான தகவல்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது முதல் மனைவிக்கு சொந்தமான வாகனத்தின் இலக்கத் தகடு மற்றும் Chassis இலக்கத்தை பயன்படுத்தி பல சந்தர்ப்பங்களில் குறித்த காரை பயன்படுத்தியுள்ளதாக இன்று (07) நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.
பொலிஸ் சட்டப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் ருவன் குணசேகர, பொலிஸார் சார்பில் சாட்சியமளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சட்டவிரோதமான முறையில் கார் ஒன்றை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி இன்று (07) நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, குறித்த இருவரையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுகேகொட நீதவான் உத்தரவிட்டார்.
தற்கொலை செய்து கொண்ட லொஹான் ரத்வத்தவின் தனிப்பட்ட செயலாளரே குறித்த காரைக் கொண்டு வந்ததாக சந்தேகநபர்கள் கூறுவது உண்மைக்கு புறம்பானது என பொலிஸ் சட்டப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரின் இரண்டாவது மனைவியான சஷி பிரபா ரத்வத்தவின் மிரிஹான வீட்டில் குறித்த கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், மேற்படி சந்தேகநபர்கள் இருவருக்கு மாத்திரம் உள்ளே செல்லக்கூடிய தானியங்கி வாயில்களைக் கொண்டதாக குறித்த வீடு காணப்படுவதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
சந்தேகநபர் 17/10/2021 அன்று குறித்த Toyota Lexus காரில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளதாகவும், அது தொடர்பான காணொளி நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்நிலையில், சந்தேகநபர்களின் பிணை கோரிக்கையை நிராகரித்த நீதவான், சந்தேக நபர்களை எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சந்தேகநபர்கள் இருவரது வங்கிக் கணக்குகளையும் பரிசோதிக்கவும், நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட காணொளி ஆதாரத்தை அரசாங்க பரிசோதகருக்கு அனுப்பிவைக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.
பகிரவும்...