லிபிய கடற்பகுதியில் 120 ஆபிரிக்க குடியேற்றவாசிகள் லிபிய கடலோர காவல்படையினரால் மீட்பு!

லிபிய கடலோர பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த 120 ஆபிரிக்க குடியேற்றவாசிகள் லிபிய கடலோர காவல்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

திரிப்போலிக்கு கிழக்கே 60 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள லிபிய நகரான கசர் கருபூலி கடலோரப் பகுதியில் வைத்து நேற்று (வியாழக்கிழமை) இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இவர்களுள் 4 சிறுவர்கள் மற்றும் 11 பெண்களும் இருந்ததாக கூறப்படுகின்றது.

குறித்த குடியேற்றவாசிகள் கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பதாக உள்ளூர் மீனவர் ஒருவர் வழங்கிய தகவலை அடுத்து மீன்பிடி படகுகள் மூலம் லிபிய கடலோர காவல்படையினர் அவர்களை மீட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடத்தல்காரர்கள் தமது படகின் இயந்திரத்தை திருடி கடலில் விட்டுச் சென்றதாக மீட்கப்பட்ட குடியேற்றவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக ஐரோப்பாவிற்குள் நுழைய முயற்சிக்கும் பல்லாயிரக்கணக்கான குடியேற்றவாசிகளை பாதுகாப்பற்ற படகுகள் மூலம் ஆட்கடத்தல்காரர்கள் அழைத்து செல்கின்றனர். இத்தகைய சட்டவிரோத பயணத்தினால் ஆயிரக்கணக்கானோர் உயிர்களையும் இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !