லாச்சப்பல் : இலங்கை இளைஞன் கை துண்டிப்பு – பழிவாங்கல் நடவடிக்கை ; காவற்துறையினர் தெரிவிப்பு

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, பரிசின் லாச்சப்பல் மற்றும் ஸ்ராலின்கிராட் பகுதிகளிற்கு இடையில் பெரும் வன்முறைச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் 29 வயது இளைஞன் ஒருவரின் கை வெட்டித் துண்டாடப்பட்டுள்ளது.
ஸ்ராலின்கிராட் அருகிலுள்ள, பரிஸ் 10 இல் அமைந்துள்ள Boulevard de la Villette இல் நட்ட நடு வீதியில் இந்த இளைஞன் தாக்கப்பட்டுள்ளான்.
இந்த இளைஞனை, பல இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று, வாள், இரும்புக் கம்பிகள் சகிதம் துரத்தி வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஓடி வந்த இந்த இளைஞன், அங்கு வந்த ஒரு பேருந்தில் ஏற முயன்றபோதும், பயணிகளின் பாதுகாப்புக் கருதி, பேருந்துச்சாரதி கதவைத் திறக்கவில்லை. அந்தப் பேருந்தின் முன்னே வைத்தே, இந்த இளைஞனின் கை, அந்தக் குழுவால் வெட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை, பேருந்தின் கண்காணிப்புக் கருவி ஒளிப்பதிவு செய்துள்ளது. சாரதி நேரடிச் சாட்சியத்தைக் காவற்துறையினரிற்கு வழங்கி உள்ளார்.
20h50 அளவில், Château-Landon இல் 48 இலக்கப் பேருந்துத் தரிப்பிடத்தில், கைவெட்டப்பட்ட நிலையில், இரத்தவெள்ளத்தில் கிடந்த நிலையில், இந்த இளைஞன் அவசரமுதலுதவிப் படையாலும் காவற்துறையினராலும் மீட்கப்பட்டு, Georges-Pompidou வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு, உயிரைக் காப்பதற்காக, இவரது கை முற்றாக வெட்டி அகற்றப்பட்டுள்ளது.
இளைஞன் இரத்த வெள்ளத்தில் கிடந்த பகுதியில் இருந்து, ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு இரத்தத் தடயங்கள் கிடந்ததாகக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது சிறீலங்காச் சமூகத்தினரிடையே நடந்த மோதல் என்றும், இது ஒரு பழிவாங்கல் நடவடிக்கை என்றும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன.