லஞ்சம் வாங்கிய புகாரில் இந்திய விளையாட்டு ஆணைய இயக்குநர் கைது!

ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் இந்திய விளையாட்டு ஆணைய இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி லோதி சாலையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக வந்த புகார்களை அடுத்து, சிபிஐ விசாரணைக்கு அந்த ஆணையத்தின் தலைமை இயக்குநர் நீலம் கபூர் உத்தரவிட்டார்.

இதன் பேரில் கடந்த இரு மாதங்களாக ரகசிய விசாரணையில் ஈடுபட்டிருந்த சிபிஐ அதிகாரிகள், வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில் டெல்லி லோதி சாலையில் உள்ள ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் உள்ள ஆணையத்தின் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது, ஆணையத்தில் ஒப்பந்த பணிகளை செய்த ஒப்பந்ததாரருக்கு கொடுக்க வேண்டிய 19 லட்ச ரூபாய்க்கு மூன்று சதவிகித தொகையை அதிகாரிகள் லஞ்சமாக பெற்றது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து லஞ்சம் வாங்கியதாக இந்திய விளையாட்டு ஆணைய இயக்குநர் எஸ்.கே.சர்மா, அதிகாரிகள் ஹிரிந்தர் பிரசாத்,  லலித் ஜோலி, வி.கே.சர்மா, ஒப்பந்ததாரர் மன்தீப் அகுஜா, அவரது ஊழியர் யூனுஸ் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

மேலும் ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் உள்ள ஆணையத்தின் அலுவலகத்திற்கும் சீல் வைத்துள்ள சிபிஐ அதிகாரிகள் மேலும் சிலரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !