ரொரன்ரோவில் அவசரகால நிலையை பிரகடனம் செய்யுமாறு வலியுறுத்தல்!

ரொரன்ரோவில் வீடற்றவர்களின் நிலைமை மோசமடைந்து செல்லும் நிலையில், அங்கு அவரகால நிலையினை பிரகடனம் செய்யுமாறு ரொரன்ரோ மாநகர சபையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ரொரன்ரோ மத்திய தொகுதி மாநகரசபை உறுப்பினர் கிறிஸ்டீன் வொங் தாம் மற்றும் பார்க்டேல்-ஹை பார்க் மாநகரசபை உறுப்பினர் கோர்ட் பேர்க்ஸ் ஆகிய இருவரும் கூட்டாக இணைந்து இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

குறிப்பாக தங்குமிட வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாத வசதி வாய்ப்பற்றவர்கள் மிகவும் பாரதூரமான நிலையினை எதிர்நோக்கிவருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வீடற்றோர் எதிர்நோக்கும் அபாயத்தினை தடுத்து நிறுத்தும் பொருட்டு அவசரகால நிலையினை அறிவிக்குமாறு கோரும் பிரகடனம் ஒன்றினையும் அவர்கள் இதன்போது வெளியிட்டுள்ளனர்.

அதில் வீடற்றோருக்கான உதவி நடவடிக்கைகளை உடனடியாக அதிகப்படுத்துமாறு ரொரன்ரோ நகரசபை, ரொரன்ரோ அவசரகால முகாமைத்துவத்தினை கேட்டுக்கொள்ள வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டோருக்கான உதவிக்கு செஞ்சிலுவைச் சங்கத்தினை அழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகளை அழைத்து, அவசர கூட்டம் ஒன்றினைக் கூட்டி, இந்த நிலைமையினைக் கட்டுப்படுத்துவதற்கான உடனடி வேலைத்திட்டம் தொடர்பில் ரொரன்ரோ நகர நிர்வாகம் ஆலோசனை நடாத்த வேண்டும் அவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது 1,81,000 பேர் வரையில் வீடுகளுக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாகவும், அது மரண தண்டனைக்கு ஒப்பானது எனவும் ரொரன்ரோ மத்திய தொகுதி மாநகரசபை உறுப்பினர் கிறிஸ்டீன் வொங் தாம் மற்றும் பார்க்டேல்-ஹை பார்க் மாநகரசபை உறுப்பினர் கோர்ட் பேர்க்ஸ் ஆகிய இருவரும் கூட்டாக இணைந்து குறிப்பிட்டுள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !